Published : 08 Nov 2021 06:42 PM
Last Updated : 08 Nov 2021 06:42 PM

டெல்லியில் பத்மஸ்ரீ விருது: புதுச்சேரி டெரகோட்டா கலைஞர் முனுசாமி பெற்றார்

புதுச்சேரி

புதுச்சேரி டெரகோட்டா கலைஞர் முனுசாமிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார். மேலும், பூர்வீக இந்தியக் கலை வடிவத்தைப் பாதுகாத்ததற்காகப் புகழ் பெற்றவர் என்றும் தனது ட்விட்டர் பதிவில் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

விருது பெற்ற முனுசாமியைப் பிரதமர் மோடி கட்டித் தழுவி, பாராட்டு தெரிவித்தார்.

மத்திய அரசு பல்வேறு துறைகளைச் சார்ந்த சிறப்பான பணிகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு 2019ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுகளைக் கடந்த 2020 ஜனவரியில் அறிவித்தது. இதில் கலைப் பிரிவில் புதுச்சேரி வில்லியனூர் அடுத்த கணுவாப்பேட்டையில் வசிக்கும் வி.கே.முனுசாமிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

அழிவின் விழிம்பில் இருக்கும் இந்த சுடுகளிமண் கலையை இன்றைய தலைமுறையினரும் தெரிந்துகொள்ளும் வகையில் மாவட்டத் தொழில் மையத்துடன் இணைந்து வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் மாணவர்களுக்குக் கற்றுத் தந்தவர் முனுசாமி. கலையைப் பாதுகாக்க முயற்சி எடுத்த அவருக்கு மாநில அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. இவ்விருது வழங்கும் நிகழ்வு இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் தர்பார் அரங்கில் நடந்தது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்மஸ்ரீ விருதை வழங்க அதை முனுசாமி பெற்றார்.

குடியரசுத் தலைவர் தனது ட்விட்டர் பதிவில், "நன்கு அறியப்பட்ட டெரகோட்டா சிற்பி முனுசாமி. இந்தப் பூர்வீக இந்தியக் கலை வடிவத்தைப் பாதுகாத்ததற்காக புகழ் பெற்றார். இந்தக் கலை வடிவத்தைப் பயன்படுத்தி புதுமையான முறையில் சிறு உருவங்களை உருவாக்கியதற்காக அவர் சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறார்" என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

விருது நிகழ்வுக்குப் பிறகு நடந்த தேநீர் நிகழ்வில் பிரதமர் மோடியும், அவருக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார். இவ்விருது என் வாழ்வில் மிக முக்கியமானது. இது பாரம்பரிய டெரகோட்டா கலையைப் பாதுகாக்க உதவும் என்றும் நெகிழ்வுடன் முனுசாமி குறிப்பிட்டார்.

.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x