Published : 08 Nov 2021 03:52 PM
Last Updated : 08 Nov 2021 03:52 PM
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதில் தமிழக அரசு கோட்டைவிட்டுள்ளது என முன்னாள் வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு , வெறும் அறிவிப்புகளாக மட்டுமே உள்ளது. வடகிழக்கு பருவமழை அக்டோபர், நவம்பர் , டிசம்பர் மாதங்களிலே பெய்யும். இது அனைவருக்கும் தெரிந்த பருவகாலநிலையாகும். இந்த ஆண்டு வட கிழக்கு பருவ மழை தொடக்கத்திலே சென்னை மாநகர் கடல் போல் காட்சியளிக்கிறது. மழை வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும். 2 நாட்கள் பெய்த தொடர் மழையால் சென்னை நகரமே தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
இன்னும் 9-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாகவும் அது 48 மணி நேரத்தில் மேலும் வழுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
பொதுவாக இது போன்ற சூழ்நிலையில் 20 செ.மீட்டருக்கு மேலே மழை பெய்யும் என்று முன்கூட்டியே கணித்து அதற்குறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுத்ததா? என்றால் அது தற்போது கேள்விக் குறியாகியிருக்கிறது. அரசிடம் பாதிக்கப்படக்கூடிய விவரங்கள் ஏற்கனவே கடந்த கால வெள்ள அனுபவத்தின் அடிப்படையில் இருக்கிறது.
அதில் மிகவும் பாதிப்புக்கு உரிய பகுதிகள் 321 , அதிக பாதிப்புக்குரிய பகுதிகள் 297 , மிதமாக பாதிப்புக்கு உரிய பகுதிகள் 1096 , குறைவான பாதிப்புக்குள்ளான பகுதிகள் 1919 ஆக 4133 இடங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு அரசிடம் துல்லியமாக விவரங்கள் உள்ளது . ஆனால் தற்போது அனைத்து பகுதிகளிலும் வெள்ளத்தாலே தத்தளித்துகொண்டிருக்கிறது.
22 சென்டி மீட்டர் மழை என்பது தாங்க முடியாத மழை பொழிவுதான். ஆனால் அதற்கு நீரை வெளியேற்ற மின்மோட்டார்கள், ராட்சத மோட்டார்கள் பயன்படுத்தி போர்கால அடிப்படையில் தண்ணீரை வெளியேற்ற வேகம் காட்டப்படவில்லை. மீட்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் அச்சப்படுகின்றனர். மழை நீரால் வாகன போக்குவரத்து கூட ஸ்தம்பித்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் வெள்ளம் வரும்முன் 15 மண்டலங்களுக்கும் இந்திய ஆட்சிப்பணி உயர் அலுவலர்கள் நியமித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் தற்போது வெள்ளம் வந்த பின்புதான் சென்னையில் உள்ள மண்டலங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களை நியமித்துள்ளனர். தற்போது கூட மதுரை அருகே உள்ள பேரையூரில் சனிக்கிழமை காற்றாட்டு வெள்ளத்தில் 2 இளைஞர்கள் அடித்து செல்லப்பட்டு இறந்துள்ளனர்.
அதே போல் பெரியகுளம் வராக நதியில் மதுரையை சேர்ந்த மாணவர் அடித்து செல்லப்பட்டார். துவரிமான் வைகை ஆற்றில் குளித்த மூவர் அடித்து செல்லப்பட்டனர். இது போன்று பல மாவட்டங்களில் நீரில் பலர் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இந்நிலை நிலை தடுக்கப்பட வேண்டும். வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 3 வேளை உணவு வழங்க வேண்டும். கடந்த ஆட்சியில் இலவசமாக அம்மா உணவகம் மூலம் வழங்கப்பட்டது .
தற்போது அம்மா உணவகத்தில் சம்பளம் இல்லாமல் ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பேரிடர் காலத்தில் அம்மா உணவகங்களையும் பயன்படுத்த அதில் உள்ள குறைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். நீர்நிலை பகுதிகளில் விளையாடுவதற்கு , குளிப்பதற்கு , துணி துவைப்பதற்கு , செல்பி எடுப்பதற்கு , வேடிக்கை பார்ப்பதற்கு அரசு தடை செய்ய வேண்டும். ஒட்டுமொத்தத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதில் தமிழக அரசு கோட்டை விட்டுள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT