Published : 08 Nov 2021 02:37 PM
Last Updated : 08 Nov 2021 02:37 PM

காவிரிக் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்: திருச்சி ஆட்சியர் அறிவுறுத்தல்

பிரதிநிதித்துவப் படம்.

திருச்சி

கர்காடக அணைகள் திறந்துவிடப்பட்டதன் காரணமாக காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு அறிவுறுத்தியுள்ளார்.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளாவிலும் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பிவருகின்றன.

இந்நிலையில், காவிரிக் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு :

''கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் கபினி அணைகளிலிருந்து திறந்து விடப்பட்ட பெருமளவு தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்துகொண்டிருக்கிறது, மேலும் கோரையாறு மற்றும் குடமுருட்டி ஆற்றில் வெள்ள நீர் வந்து கொண்டுள்ளது.

இதனால் மேட்டூர் அணை அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டும் நிலையில் உள்ளது. எனவே, வெள்ள பாதுகாப்பு கருதி முக்கொம்பு மேலணை தடுப்பணையிலிருந்து விநாடிக்கு 10,000 கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் இன்று (08.11.2021) மாலை 6.00 மணிக்குத் திறந்துவிடப்படுகிறது. கரையோர கிராமங்களில் உள்ள மக்கள் மற்றும் சலவைத் தொழிலாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

செல்ஃபி எடுக்க வேண்டாம்

காவிரியில் அதிக நீர்வரத்து வந்து கொண்டிருக்கும் தற்போதைய நிலையில் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, மீன் பிடிக்கவோ அல்லது பொழுது போக்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பாதுகாப்பற்ற கரையோரங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் நின்றுகொண்டு பொதுமக்களோ அல்லது மாணவர்களோ 'செல்ஃபி' எடுக்க அனுமதி இல்லை.

வெள்ள அபாயம் ஏற்பட்டால் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். 93840 56213 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பலாம். மேலும் வட்டாட்சியர்களைத் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கலாம். TN- SMART என்ற செயலியின் மூலமும் தகவல் தெரிவிக்கலாம்''.

இவ்வாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x