Published : 08 Nov 2021 01:09 AM
Last Updated : 08 Nov 2021 01:09 AM
நாடு முழுவதும் 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி போடப்பட்டுள்ளதால், கரோனா மூன்றாவது அலை வந்தாலும் அதன் பாதிப்பு குறைவாகவே இருக்கும், என இந்திய மருத்துவ சங்கத்தின் தேசியத் தலைவர் ஜெயலால் தெரிவித்தார்.
ஈரோடு கங்காபுரம் பகுதியில் செயல்படும் இமயம் புற்றுநோயாளிகள் காப்பகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. இந்திய மருத்துவ சங்கத்தின் தேசியத் தலைவர் ஜெயலால், கலாம் சிலையைத் திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
2000 மருத்துவர்கள் மரணம்
கிராமங்கள் தோறும் சென்று புற்றுநோய் கண்டறியும் நடமாடும் பேருந்து சேவை ஏற்படுத்தும் முயற்சியில் இந்திய மருத்துவ சங்கம் ஈடுபட்டுள்ளது. கரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் 2000 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி போடப்பட்டுள்ளதால், கரோனா மூன்றாவது அலை வந்தாலும், அதன் பாதிப்புகள் குறைவாகவே இருக்கும். கிராமப்பகுதி மற்றும் மலைவாழ் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியில் அரசுடன் இணைந்து ஐஎம்ஏ செயல்படும்.
கரோனா மாத்திரை
கரோனா நோய்க்கான மாத்திரையை, மத்திய அரசு மற்றும் சுகாதாரத்துறை அங்கீகரித்தால் மட்டுமே, அனைத்து மருத்துவர்களும் பயன்படுத்துவோம். மருத்துவமனைகளில் ஏற்படும் தீ விபத்துகளைத் தடுக்க உரிய பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளைப் பாதுகாப்பதற்கான சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும்.
சித்தா, ஆயுர்வேதா, யுனானி உட்பட இந்தியாவில் உள்ள அனைத்து சிகிச்சை முறைகளையும் நாங்கள் வரவேற்கிறோம். ஒவ்வொரு சிகிச்சையும் ஒவ்வொரு தனித்தன்மை கொண்டதாகும். அதே நேரத்தில் ஒரே மருத்துவர் எல்லா சிகிச்சை முறைகளையும் மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் தியாகராஜன், தலைவர் (தேர்வு) பழனிசாமி, துணைத்தலைவர் மல்லிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT