Last Updated : 07 Nov, 2021 07:02 PM

3  

Published : 07 Nov 2021 07:02 PM
Last Updated : 07 Nov 2021 07:02 PM

மாடியிலுள்ள நீதிமன்றத்துக்கு செல்வதில் சிரமம்: மாற்றுத்திறனாளி பெண்ணின் வழக்கை தரைத்தளத்துக்கு மாற்றிய உயர் நீதிமன்றம் 

உயர்நீதிமன்றம், மதுரைக் கிளை | கோப்புப்படம்.

மதுரை 

மாவட்ட நீதிமன்றத்தின் முதல் மாடியிலுள்ள குடும்பநல நீதிமன்றத்தில் மாற்றுத்திறனாளி பெண் தொடர்ந்துள்ள வழக்கை, அவருக்கு வசதியாக தரைத்தளத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு மாற்றி மதுரை உயர் நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஜெசிந்த் சிறிஸ்டபிள். இவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

நான் 80 சதவீத மாற்றுத்திறனாளி. வங்கி மேலாளராக பணிபுரிகிறேன். எனக்கும் மதுரை கோ புதூர் ஆலங்குளத்தைச் சேர்ந்த ஜெகன்குமாருக்கும் 2016-ல் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு என்னை கணவரும், அவரது குடும்பத்தினரும் கொடுமைப்படுத்தி வந்தனர். இதனால் நெல்லை மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்து வழக்கு தொடர்ந்தேன்.

இந்த நீதிமன்றம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் முதல் மாடியில் அமைந்துள்ளது. இங்கு லிப்ட் வசதியோ, மாற்றுத் திறனாளிகள் செல்ல தனி சாய்வுப்பாதையோ இல்லை. 25 படிக்கட்டுகள் வழியாகவே நீதிமன்றம் செல்ல வேண்டும்.

80 சதவீத மாற்றுத்திறனாளியான நான் ஒவ்வொரு வேலையையும் இன்னொரு நபரின் உதவியுடன் மேற்கொள்ளும் நிலையில் உள்ளேன். இதனால் வழக்கு விசாரணையின் போது என்னால் நீதிமன்றத்துக்கு செல்ல முடியவில்லை. எனவே நெல்லை குடும்ப நல நீதிமன்றத்தில் உள்ள எனது விவாகரத்து வழக்கை தரைத்தளத்தில் அமைந்துள்ள 3வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.கருணாநிதி வாதிட்டார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர் வழக்கு தொடர்ந்துள்ள குடும்ப நல நீதிமன்றம் முதல் மாடியில் இருப்பதும், அங்கு லிப்ட் வசதி, சாய்வு தளப் பாதை இல்லாததையும் நீதிமன்ற அலுவலர்கள் உறுதி செய்துள்ளனர். இதனால் மனுதாரர் நெல்லை குடும்பநல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு அங்கிருந்து திரும்பப் பெறப்பட்டு, அதே நீதிமன்ற வளாகத்தில் தரைத்தளத்தில் அமைந்துள்ள 3-வது கூடுதல் மாவட்ட நீதின்றத்துக்கு மாற்றப்படுகிறது. இந்த வழக்கை நீதிபதி விரைவில் விசாரித்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x