Published : 07 Nov 2021 06:17 PM
Last Updated : 07 Nov 2021 06:17 PM
மழைப் பொழிவு காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் (8,9ம் தேதிகள்) விடுமுறை விடப்பட்டுள்ளது.
கரோனா பரவல் காரணமாக 2020 மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. பொதுத்தேர்வுகளும் நடைபெறாமல் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை புதுவையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
1 முதல் 8ம் வகுப்பு வரை நாளை முதல் அரைநாள் சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பள்ளிகள் திறப்புக்காக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்கு வருகைப் பதிவேடு கிடையாது, ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் தடுப்பூசி போட்டுள்ளதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு நெறிமுறைகளை பின்பற்றி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் கனமழைபெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் ஏரி, குளம் நிரம்பியுள்ளது. அண்டை மாநிலமான தமிழகத்தில் பெய்த கனமழையால் வீடூர் அணை நிரம்பி அணை திறக்கப்பட்டுள்ளது.
சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதேபோல மலட்டாற்றிலும் வெள்ளம் ஓடுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளனர். புதுச்சேரியில் மழை விட்டு, விட்டு பொழிகிறது.
இந்நிலையில் கல்வியமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், "தொடர் மழையால் நாளையும், நாளை மறுநாளும் (8,9ம் தேதிகளுக்கு) 9 முதல் 12ம் வகுப்புகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்படுகிறது. அதேபோல் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் நாளை (8ம் தேதி) திறக்கப்பட இருந்தது. மழையின் காரணமாக அவ்வகுப்புகளுக்கும் விடுமுறை விடப்படுகிறது. மழையின் தன்மை பொருத்து 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு பற்றி பின்னர் அறிவிக்கப்படும்" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT