Published : 07 Nov 2021 05:08 PM
Last Updated : 07 Nov 2021 05:08 PM

கரோனாவுக்குப் பிறகு கோவை-பொள்ளாச்சி, பழனி இடையே மீண்டும் ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

பிரதிநிதித்துவப்படம்.

சென்னை

பயணிகளின் கோரிக்கையை தொடர்ந்து கோவை- பொள்ளாச்சி, பழனி இடையே முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

கோவை போத்தனுார் - பொள்ளாச்சி இடையே 40 கி.மீ. அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்துள்ளன. போத்தனுார் - பொள்ளாச்சி வழித்தடத்தில் கடைசியாக 2020 மார்ச் மாதம் ரயில்கள் இயக்கப்பட்டன. கடந்த 17 மாதங்களாக ரயில்கள் இயக்கப்படவில்லை.

கரோனா தொற்று பாதிப்பு குறைந்த அந்த வழித்தடத்தில் மீண்டும் ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

அதைத்தொடர்ந்து, ரயில்வே வாரியம் அனுமதி அளித்ததால், கோவையில் இருந்து போத்தனுார், பொள்ளாச்சி வழியாக மீண்டும் ரயில்சேவை தொடங்க உள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோவை ரயில் நிலையத்தில் இருந்து வரும் 10-ம் தேதி முதல் தினமும் மதியம் 2.10 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண்:06463), மாலை 4.40 மணிக்கு பழநி சென்றடையும். பழநியில் இருந்து வரும் 11-ம் தேதி முதல் காலை 11.15 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண்:06462) மதியம் 2 மணிக்கு கோவை ரயில்நிலையம் வந்தடையும்.

இந்த ரயில்கள், போத்தனுார், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலைப்பேட்டை, மைவாடி சாலை, புஷ்பத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

பழநியில் இருந்து வரும் 10-ம் தேதி முதல் தினமும் மாலை 4.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06479) இரவு 7.40 மணிக்கு மதுரை சென்றடையும்.

மதுரையில் இருந்து வரும் 11-ம் தேதி முதல் தினமும் காலை 7.20 மணிக்கு புறப்படும் ரயில் (எண்:06480) காலை 10.10 மணிக்கு பழநி வந்தடையும். கோவை ரயில்நிலையத்தில் இருந்து வரும் 13-ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை தவிர தினமும் மாலை 6.15 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண்:06419) இரவு 7.45 மணிக்கு பொள்ளாச்சி சென்றடையும்.

பொள்ளாச்சியில் இருந்து வரும் 14-ம் தேதி முதல் காலை 7.25 மணிக்கு புறப்படும் ரயில் (எண்:06420) காலை 8.40 மணிக்கு கோவை ரயில்நிலையம் வந்தடையும். இந்த ரயில்கள், போத்தனுார், கிணத்துக்கடவு ரயில் நிலையங்களில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x