Published : 07 Nov 2021 03:01 PM
Last Updated : 07 Nov 2021 03:01 PM
உறவினர் எச்சரித்தும் ஆற்றைக்கடக்க முயன்றவர் வெள்ளத்தில் மூழ்கி பலியான சோக நிகழ்வு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நடந்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக தமிழகமெங்கும் பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆற்றை கடக்க முயன்றவர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உசிலம்பட்டி அருகே உள்ள ராமசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராஜசேகர். இவர் நேற்று மாலை தனது தோட்டத்திற்கு செல்வதற்காக விட்டல்பட்டி ஆற்றைக் கடக்க முயன்றார். அப்போது கரையிலிருந்த அவரது உறவினர் ஒருவர் ஆற்றில் இறங்க வேண்டாம் வெள்ளம் அதிகரிக்கிறது என்று எச்சரித்தபடி இருந்தார். ஆனால் அதை சற்றும் பொருட்படுத்தாத ராஜசேகர் துணிந்து ஆற்றில் இறங்கி அக்கரைக்கு செல்ல முயன்றார்.
அப்போது எதிர்பாராத வெள்ளம் ஆற்றில் பெருக்கெடுத்து வந்தது. இதனால் ராஜசேகர் வெள்ளத்திலேயே அடித்துச் செல்லப்பட்டார். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் விடியவிடிய தேடும் பணியில் ஈடுபட்டனர். இன்று காலை 4 கி.மீ. தொலைவில் உள்ள சாத்தூர் அருகை உள்ள கண்மாயில் அவரது உடலை மீட்டெடுத்தனர்.
இதற்கிடையில் உறவினர் எச்சரிக்கை விடுத்தும் கேளாமல் ஆற்றில் இறங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT