Published : 06 Nov 2021 05:38 PM
Last Updated : 06 Nov 2021 05:38 PM
வீடூர் அணை எந்நேரத்திலும் திறந்துவிடப்படும் என்பதால் சங்கராபரணி ஆற்றங்கரையோர கிராம மக்களுக்கு வில்லியனூர் வருவாய்த் துறையினர், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள், ஊழியர்கள் தண்டோரா போட்டும், ஒலிபெருக்கி மூலமும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணை கனமழையால் நிரம்பி வருகிறது. அதன் முழுக் கொள்ளளவான 32 அடியில், நேற்றைய நிலவரப்படி 30 அடி வரை நிரம்பியுள்ளது. இது விரைவில் முழுக் கொள்ளளவையும் எட்டும் பட்சத்தில் அணை எந்நேரத்திலும் திறந்துவிடப்படும் நிலை உள்ளது. அவ்வாறு திறந்துவிடப்படும் நீர் சங்கராபரணி ஆற்றில் புதுச்சேரி மாநில எல்லையான மணலிப்பட்டை வந்தடைந்து செட்டிப்பட்டு, சுத்துக்கேணி, கைக்கிளைப் பட்டு வழியாக ஊசுட்டேரியின் ஒரு பகுதிக்குச் செல்லும்.
மறுபகுதி குமராபாளையம், வம்புப்பட்டு, செல்லிப்பட்டு வழியாக வில்லியனூர் சென்று கடலில் கலக்கும். இதனால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். ஆகவே, சங்கராபரணி ஆற்றின் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க அறிவுறுத்தி புதுச்சேரி வில்லியனூர் வட்டாட்சியர் கார்த்திகேயன், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன் மற்றும் திருக்கனூர் போலீஸார் இன்று (நவ. 6) கூனிச்சம்பட்டு, மணலிப்பட்டு, செட்டிப்பட்டு, கைக்கிளைப் பட்டு, செல்லிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் ஒலிபெருக்கி மூலமும், தண்டோரா போட்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.
‘‘எந்த நேரமும் வீடூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என்பதால் ஆற்றுப் பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்க்க, குளிப்பாட்ட ஓட்டிச் செல்லக்கூடாது’’ எனக் கேட்டுக்கொண்டனர்.
பின்னர் இது தொடர்பாக மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘வீடூர் அணையில் 30 அடி அளவில் நீர் உயர்ந்துள்ளது. இதனால் வீடூர் அணை திறக்கும் சூழல் இருக்கிறது. இதனால் சங்கராபரணி ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை உள்ளது.
இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பாக இருக்கும்படி ஒலிபெருக்கி மூலமும், தண்டோரா போட்டும் எச்சரிக்கை விடுத்தும் அறிவுறுத்தி வருகிறோம். இதன் மூலம் மக்கள் விழிப்படைந்து ஆற்றில் குளிப்பதையும், கால் நடைகளை ஆற்றுப்பகுதிக்கு ஓட்டி வருவதையும் தவிர்ப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு தவிர்க்கும் பட்சத்தில் ஆபத்துகள் வரும் சூழலும் குறையும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment