Published : 06 Nov 2021 04:13 PM
Last Updated : 06 Nov 2021 04:13 PM
சென்னை மாநகரில் பருவமழை மற்றும் பேரிடர்க் காலங்களில், நெடுஞ்சாலைத் துறை தொடர்பான தகவல் மற்றும் புகார்களைத் தெரிவிக்கத் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வடகிழக்குப் பருவமழை அக்.25-ம் தேதி தொடங்கியது. தென்னிந்தியப் பகுதிகளில், குறிப்பாகத் தமிழகம், தெற்கு ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை காரணமாகப் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதை முன்னிட்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம், மாவட்டங்களில் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களும் முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லாத் தொலைபேசியுடன், கூடுதலான அலுவலர்களுடன் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது.
* பேரிடர்க் காலங்களில் ஹெலிகாப்டர்கள் இறங்குவதற்கு ஹெலிபேட் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
* பாதிப்பிற்குள்ளாகும் இடங்களுக்கு உடனடியாக அனுப்பும் பொருட்டு, தேசியப் பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
* மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளைத் தாமதமின்றி வழங்கவும், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்படும் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவும், அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்திடவும், நிவாரண முகாம்களில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கவும், குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தேவைப்படும் பால், ரொட்டி, உணவு, மருந்துகள் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்திடவும், மழைக்காலங்களில் தொற்று வியாதிகள் / டெங்கு போன்றவை பரவாமல் இருக்கவும், தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தகுந்த முன்னேற்பாடுகள், உபகரணங்களுடன் 24X7 செயல்படும் வகையில் தயார் நிலையில் உள்ளதாக தீயணைப்பு - மீட்புப் பணித்துறையும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகரில் பருவமழை மற்றும் பேரிடர்க் காலங்களில், நெடுஞ்சாலைத் துறை தொடர்பான தகவல் மற்றும் புகார்கள் தெரிவிக்க, பொதுமக்கள் கீழ்க்கண்ட அலுவலர்களைக் கைப்பேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1) கோட்டப் பொறியாளர் - 94431 32839
2) உதவிக் கோட்டப் பொறியாளர் - 70101 05959 (சென்னை மாநகர சாலைகள்)
3) உதவிக் கோட்டப் பொறியாளர் - 94433 28377 (தாம்பரம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT