Published : 06 Nov 2021 01:25 PM
Last Updated : 06 Nov 2021 01:25 PM

தமிழக உரிமை கேரளாவிடம்‌ அடகு வைக்கப்பட்டுவிட்டதோ?- முல்லைப்‌ பெரியாறு அணை விவகாரத்தில் ஓபிஎஸ் சந்தேகம்

சென்னை

தமிழ்நாட்டின்‌ உரிமை கேரளாவிடம்‌ அடகு வைக்கப்பட்டுவிட்டதோ என்று ஓபிஎஸ் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்‌ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''முல்லைப்‌ பெரியாறு அணையின்‌ நீர்மட்டம்‌ 142 அடியை எட்டாத சூழ்நிலையில்‌, சிவகங்கை மற்றும்‌ ராமநாதபுரம்‌ மாவட்டங்களைத் தண்ணீர்‌ சென்றடையாத நிலையில்‌, முல்லைப்‌ பெரியாறு அணையிலிருந்து கேரள அமைச்சர்கள்‌ முன்னிலையில்‌ கேரளாவிற்குத் தண்ணீர்‌ திறந்துவிட வேண்டியதன்‌ அவசியம்‌ என்ன என்பது குறித்தும்‌, கேரள அரசு தன்னிச்சையாகவே திறந்துவிட்டதா அல்லது தமிழ்நாடு அரசின்‌ இசைவுடன்‌ திறந்துவிட்டதா என்பது குறித்தும்‌, தன்னிச்சையாகத் திறந்துவிட்டது என்றால்‌ தமிழ்நாடு அரசு சார்பில்‌ அதிகாரிகள்‌ ஏன்‌ கலந்து கொண்டார்கள்‌ என்பது குறித்தும்‌, தண்ணீர்‌ திறந்துவிடுவதற்கு முன்பு ஐந்து மாவட்ட விவசாயிகளிடம்‌ கலந்து ஆலோசிக்கப்பட்டதா என்பது குறித்தும்‌ பதில்‌ அளிக்குமாறு 30-10-2021அன்று அறிக்கை வாயிலாகக் கேட்டிருந்தேன்.

அதற்கு தெளிவான பதில்‌ வராததையடுத்து, அதனைக்‌ கண்டித்து அதிமுக‌ சார்பில்‌ போராட்டம்‌ அறிவித்த நிலையில்‌, என்னுடைய கேள்விகளுக்குச் சரியான பதில்‌ அளிக்காமல்‌, கேரள அரசையும்‌ கண்டிக்காமல்‌, பெயருக்காக முல்லைப்‌ பெரியாறு அணையைப் பார்வையிட்டுவிட்டு, நான்‌ முல்லைப்‌ பெரியாறு அணையைப் பார்வையிடவில்லை என்றும்‌, போராட்டம்‌ மட்டும்‌ அதிமுகவால்‌ நடத்தப்படுகிறது என்றும்‌ தெரிவித்து, அதிமுகவிற்கு அதைப் பற்றிப் பேச தார்மீக உரிமையில்லை என்று நீர்வளத்‌ துறை அமைச்சர்‌ துரைமுருகன்‌ பதில்‌ அளித்திருப்பது "பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால்‌ கொட்டைப்பாக்கு விலை பத்துப் பைசா” என்பதுபோல்‌ உள்ளது.

முல்லைப்‌ பெரியாறு அணையை நான்‌ ஆய்வு செய்ததில்லை, பார்வையிடவில்லை என்று அமைச்சர்‌ துரைமுருகனின்‌ கூற்று முற்றிலும்‌ உண்மைக்குப்‌ புறம்பானது. 2001 முதல்‌ 2006 வரையிலான அதிமுக ஆட்சிக்‌ காலத்தில்‌, 2002 முதல் 2006 வரை பொதுப்‌ பணித்‌துறை அமைச்சர்‌ என்ற முறையிலும்‌, 2011 முதல்‌ 2021 வரையிலான அதிமுக ஆட்சியில்‌ பொதுப்‌பணித்‌துறை அமைச்சர்‌ என்ற முறையில்‌ 2013 மற்றும்‌ 2014ஆம்‌ ஆண்டுகளிலும்‌, 2011, 2012 மற்றும்‌ 2015 முதல்‌ 2021 வரை மாவட்ட அமைச்சர்‌ என்ற முறையிலும்‌ படகில்‌ முல்லைப்‌ பெரியாறு அணைப்‌ பகுதிக்குச்‌ சென்று அங்கிருந்து தேனி, திண்டுக்கல்‌, மதுரை, சிவகங்கை, மற்றும்‌ ராமநாதபுரம்‌ மாவட்டங்களின்‌ பாசனத்திற்காகத் தண்ணீர்‌ திறந்துவிடும்‌ பாக்கியத்தைப் பெற்றதோடு பேபி அணை உட்பட அனைத்தையும்‌ ஆய்வு செய்த அனுபவமும்‌ எனக்கு உண்டு.

சுருக்கமாகச்‌ சொல்ல வேண்டுமென்றால்‌ 14 முறை நான்‌ முல்லைப்‌ பெரியாறு அணைப்‌ பகுதிக்குச்‌ சென்று தண்ணீரைப் பாசனத்திற்காகத் திறந்துவிட்டு ஆய்வு செய்திருக்கிறேன்‌. இந்த அணையைக்‌ கட்டிய கர்னல்‌ ஜான்‌ பென்னி குயிக்‌ வாழ்ந்த இடத்திற்கும்‌ சென்று, இல்லத்தின்‌ வடிவத்தை மாற்றாமல்‌ பராமரிப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்‌ என்று உத்தரவு பிறப்பித்து அதன்பேரில்‌ பராமரிப்புப்‌ பணிகளும்‌ மேற்கொள்ளப்பட்டன. கர்னல்‌ ஜான்‌ பென்னி குயிக்‌குக்கு தேனி மாவட்டத்திலே நினைவு மண்டபம்‌ அமைக்கப்பட்டு, முன்னாள் முதல்வரால்‌ 2013ஆம்‌ ஆண்டு அவர்‌ பிறந்த நாளான ஜனவரி 15ஆம்‌ தேதி திறந்து வைக்கப்பட்டது என்பதையும்‌ இந்தத்‌ தருணத்தில்‌ சுட்டிக்காட்ட விரும்புகிறேன்‌.

கர்னல்‌ ஜான்‌ பென்னி குயிக்‌ பிறந்த தினத்தை பொங்கல்‌ வைத்து அதிமுகவினர் கொண்டாடிக்‌ கொண்டு வருகின்றனர்‌ என்பதையும்‌ அமைச்சருக்கு இந்த நேரத்தில்‌ நான்‌ கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்‌. என்னுடைய வாழ்க்கையே முல்லைப்‌ பெரியாறு அணையுடன்‌ பின்னிப் பிணைந்த ஒன்றாகும்‌. உண்மை நிலை இவ்வாறு இருக்க, நான்‌ முல்லைப்‌ பெரியாறு அணையைப் பார்வையிட்டதே இல்லை என்று அனுபவம் வாய்ந்த அமைச்சர்‌ கூறுவது முழுப்‌ பூசணிக்காயைச் சோற்றில்‌ மறைப்பதுபோல்‌ உள்ளது.

முல்லைப்‌ பெரியாறு பிரச்சனை மட்டுமல்ல, தமிழ்நாட்டின்‌ எந்தப்‌ பிரச்சினை குறித்தும்‌, தமிழக மக்களின்‌ எந்தப்‌ பிரச்சினை குறித்தும்‌ பேசுவதற்கு அதிமுகவிற்கு முழு தார்மீக உரிமை உண்டு என்பதை ஒருசில எடுத்துக்காட்டுகளுடன்‌ விளக்க நான்‌ கடமைப்பட்டிருக்கிறேன்‌.

முல்லைப்‌ பெரியாறு அணையின்‌ நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக்‌ கொள்ளலாம்‌ என்று உச்ச நீதிமன்றம்‌ 2006ஆம்‌ ஆண்டு பிப்ரவரி மாதம்‌ தீர்ப்பளித்த நிலையில்‌, அந்தத்‌ தீர்ப்பினை அவமதிக்கும்‌ வகையில்‌ கேரள அரசு சட்டத்‌திருத்தம்‌ கொண்டுவந்தபோது அந்தச்‌ சட்டத்‌ திருத்தம்‌ செல்லத்தக்கதல்ல என உத்தரவிடக்‌ கோரி உச்ச நீதிமன்றத்திலே 2006ஆம்‌ ஆண்டு மார்ச்‌ மாதம்‌ வழக்குத் தொடுத்த அரசு ஜெயலலிதா‌ தலைமையிலான அதிமுக அரசு. இதற்கிடையில்‌ தமிழ்நாடு சட்டப்‌ பேரவைக்கான பொதுத்‌ தேர்தல் 2006ஆம்‌ ஆண்டு அறிவிக்கப்பட்டு அரசியல்‌ கட்சிகள்‌ தேர்தல்‌ பிரச்சாரத்தில்‌ மும்முரமாக ஈடுபட்டன. அந்தத்‌ தேர்தல்‌ பிரச்சாரத்தின்போது, "தமிழ்நாட்டில்‌ நடைபெறும்‌ தேர்தலில்‌ திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்தால்‌, அண்டை மாநிலங்கள்‌ உடனான நதிநீர்ப் பிரச்சினைகள்‌ தீர்ந்துவிடும்‌” என்ற வாக்குறுதி திமுக கூட்டணியினரால்‌ மக்கள்‌ முன்‌வைக்கப்பட்டது.

ஆனால்‌, திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைந்தும்‌, அண்டை மாநிலங்களுடனான நதிநீர்ப்‌ பிரச்சினையில்‌ எந்தத்‌ தீர்வும்‌ காணப்படவில்லை. உண்மையிலேயே திமுகவிற்கு அக்கறை இருந்திருக்குமானால்‌, திமுகவிற்கு அப்போது மத்திய அரசில்‌ இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றத்‌ தீர்ப்பின்படி முல்லைப்‌ பெரியாறு அணையின்‌ நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி இருக்கலாம்‌. இதேபோன்று 2007ஆம்‌ ஆண்டு வெளிவந்த காவிரி நடுவர்‌ மன்ற இறுதித்‌ தீர்ப்பினை மத்திய அரசிதழில்‌ வெளியிட்டு இருக்கலாம்‌. ஆனால்‌, எதையுமே செய்யவில்லை. 'மனம்‌ இருந்தால்‌ மார்க்கம்‌ உண்டு' என்று சொல்வார்களே அந்த மனம்‌ திமுகவிற்கு இல்லை.

அதே சமயத்தில்‌, ஜெயலலிதா‌ 2011ஆம்‌ ஆண்டு தமிழ்நாட்டின்‌ முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர்‌ காவிரி நடுவர்‌ மன்ற இறுதி ஆணையை மிகப்‌ பெரிய சட்டப்‌ போராட்டம்‌ நடத்தி அதனை மத்திய அரசிதழில்‌ வெளியிடச்‌ செய்தார்கள்‌. இதேபோன்று, மிகப்‌ பெரிய சட்டப்‌ போராட்டம்‌ நடத்தி முல்லைப்‌ பெரியாறு அணையின்‌ நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 வரை உயர்த்துவதற்கான உச்ச நீதிமன்றத்‌ தீர்ப்பினைப்‌ பெற்று அதனை நடைமுறைப்படுத்திக்‌ காட்டியது ஜெயலலிதா‌ தலைமையிலான அதிமுக அரசு.

எனவே, முல்லைப்‌ பெரியாறு அணை மட்டுமல்லாது, தமிழ்நாட்டின்‌ எந்தப்‌ பிரச்சினை குறித்தும்‌ பேசக்கூடிய முழுத்‌ தகுதி அதிமுகவிற்கு உண்டு என்பதை நீர்வளத்‌ துறை அமைச்சர்‌ துரைமுருகனுக்கு அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இந்தத்‌ தார்மீக உரிமை திமுகவிற்கு இருக்கிறதா என்பதை திமுகவின்‌ கடந்த கால நடவடிக்கைகளிலிருந்தே அறிவார்ந்த தமிழக மக்கள்‌ எளிதில்‌ புரிந்துகொள்வார்கள்‌.

முல்லைப்‌ பெரியாறு அணை குறித்து தற்போதைய கேள்விகள்‌, முல்லைப்‌ பெரியாறு அணையிலிருந்து கேரள அமைச்சர்கள்‌ முன்னிலையில்‌ கேரளாவிற்குத் தண்ணீர்‌ திறந்துவிடப்பட்டது கேரள அரசின்‌ தன்னிச்சையான நடவடிக்கையா அல்லது தமிழ்நாடு அரசின்‌ இசைவுடனா என்பதும்‌; கேரள அரசின்‌ தன்னிச்சையான நடவடிக்கை என்றால்‌ அங்கு தமிழ்நாடு அரசு அதிகாரிகள்‌ எப்படிக் கலந்துகொண்டார்கள்‌ என்பதும்‌; தமிழ்நாடு அரசின்‌ ஒப்புதலுடன்‌ என்றால்‌ இதுகுறித்து விவசாயிகளிடமும்‌, பிற கட்சிகளிடமும்‌ கலந்து ஆலோசிக்கப்பட்டதா என்பதும்‌; அணையின்‌ நீர்மட்டம்‌ 142 அடியை எட்டுவதற்கு முன்பு கேரளாவிற்குத் தண்ணீர்‌ திறந்துவிட வேண்டியதன்‌ அவசியம்‌ என்ன என்பதும்தான்‌. இதற்குத்‌ தெளிவான பதிலை அளிக்காமல்‌, நதிநீர்‌ உரிமையை நிலைநாட்டிய அதிமுகவைக் குறைகூறிப்‌ பேசுவது கண்டிக்கத்தக்கது. இதன்‌ மூலம்‌, தமிழ்நாட்டின்‌ உரிமை கேரளாவிடம்‌ அடகு வைக்கப்பட்டுவிட்டதோ என்ற சந்தேகமும்‌ தெளிவாகிறது.

விவசாயிகளின்‌ சந்தேகத்தைப் போக்க வேண்டிய கடமையும்‌, பொறுப்பும்‌ தமிழ்நாடு அரசிற்கு இருக்கின்ற நிலையில்‌, அதைத் தெளிவுபடுத்தாத காரணத்தால்‌ அதனைக்‌ கண்டித்து அதிமுக‌ சார்பில்‌ போராட்டம்‌ நடத்தப்படுகிறது என்பதைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இனியாவது, 'நடந்தது என்ன?' என்பதை தமிழ்நாடு அரசு விளக்கும்‌ என்று எதிர்பார்க்கிறேன்‌. இல்லையெனில்‌, அதற்குரிய விளைவுகளை திமுக சந்திக்கும்‌''.

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x