Last Updated : 06 Nov, 2021 01:49 PM

22  

Published : 06 Nov 2021 01:49 PM
Last Updated : 06 Nov 2021 01:49 PM

என்னைப் பார்த்து என் சமூகத்தில் பிறரும் படிக்க வேண்டும்; அதுதான் என் வெற்றி: நீட் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடி மாணவி சங்கவி பேட்டி

”நான் மட்டுமே படித்துவிட்டால் போதாது. என்னைப் பார்த்து இரண்டு குழந்தைகள் படிக்க வேண்டும். அதுதான் என் படிப்புக்கான வெற்றியும்கூட”... தீர்க்கமாகச் சொல்கிறார் சங்கவி.

கோவை மாவட்டம், திருமலைப்பாளையம், ரெட்டி கவுண்டனூர் அருகே நஞ்சப்பனூர் என்ற கிராமத்தின் பழங்குடி மக்களின் நம்பிக்கையாக உருவாகி இருக்கிறார் நீட் தேர்வில் வெற்றி பெற்ற சங்கவி. கைப்பேசி மூன்று முறை இடமாறிய பிறகுதான் சங்கவியிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு கிடைத்த வெற்றி என்பதால் சங்கவியின் குரலில் தன்னம்பிக்கையும், நிதானமும் நிரம்பி இருந்தது.

மலசர் சமூகத்திலிருந்து முதன்முதலாக நீட் தேர்வில் வெற்றி பெற்ற சங்கவி 'இந்து தமிழ் திசை' இணையதளத்துக்கு அளித்த பேட்டி:

உங்கள் கிராமத்தின் முதல் மருத்துவராக உருவாகப் போகிறீர்கள். எப்படி உணர்கிறீர்கள்?

எனது மகிழ்ச்சியைச் சொல்வதற்கு அளவே இல்லை. நான் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டது என் அப்பாதான். விவசாயக் கூலி வேலை செய்துதான் அப்பா என்னைப் படிக்க வைத்தார்.

கடந்த வருடம் அப்பா நெஞ்சு வலி காரணமாக இறந்த பிறகு, எனக்கு என் அம்மாதான் எல்லாம். அவருக்குக் கடந்த இரண்டு வருடங்களாக உடல் நிலை சரியில்லை. நான்தான் அம்மாவைப் பார்த்துக் கொண்டேன். இந்த நிலையில் எனக்கு இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, எனது வெற்றி எனது கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு நிச்சயம் நம்பிக்கை அளித்திருக்கிறது.

தந்தையின் இறப்பு, தாயின் உடல் நலமின்மை, வறுமை இந்தச் சூழலில் நீட் தேர்வை நோக்கிச் செல்ல எது உங்களைத் தள்ளியது?

அப்பாவுக்காகத்தான் நான் படிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அப்பாவே இல்லை என்றானதும் மிகப்பெரிய மன அழுத்தத்தை எதிர்கொண்டேன். ஆனால், எனது ஆழ்மனதில் எப்படியாவது படித்துவிட வேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. அம்மாவும் உன் படிப்புதான் உன் தந்தையின் அடையாளம் என்று என்னை ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார்.

அதுமட்டுமல்லாது எங்கள் கிராமத்திலிருந்து யாரும் பெரிதாகப் படித்து வேலைக்குச் செல்லவில்லை. பிற சமூக மக்கள் நன்றாகப் படித்து பிற தொழில்களில் பெரிய, பெரிய வேலைக்குச் செல்வதைப் பார்த்திருக்கிறேன். ஏன் எனது கிராமத்திலிருந்து யாரும் பெரிய படிப்பு படித்து வேலைக்குச் செல்லவில்லை என்று வேதனையாக இருந்தது.

கடந்த வருடம் வரை எங்கள் கிராமத்தில் சாலை உட்பட பல அடிப்படை வசதிகள் இல்லை. வெளியிலிருந்து எங்களுக்கு உதவும் ஸ்பான்சர்கள் மூலமே எங்கள் வீட்டுக்கு மின்சாரம் கிடைத்தது. பிற குடிசைகளில் இந்த வசதி கூட இல்லை. இந்த நிலை மாற வேண்டும் என்று நினைத்தேன்.

இதற்குப் படிப்பு மட்டுமே ஒரே தீர்வாக இருந்தது. நான் படித்து ஜெயித்துவிட்டால் என்னைப் பார்த்து இங்குள்ள குழந்தைகள் படிப்பைத் தங்கள் வாழ்க்கையை மாற்றும் பாதையாகத் தேர்வு செய்வார்கள் என்று நினைத்தேன். இதுதான் என்னை நீட்டை நோக்கித் தள்ளியது. வெற்றியையும் தேடித் தந்தது.

நீட் தேர்வுக்காக உங்களை எப்படி தயார்படுத்திக் கொண்டீர்கள்?

சிறு வயதிலேலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பது எனது கனவு. 12ஆம் வகுப்பு முடிந்து 2018-ல் நான் நீட் தேர்வு எழுதும்போது 6 மதிப்பெண்ணில் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டேன்.

அதன்பிறகு நான் டிப்ளமோவில் சேர்ந்தேன். தொடர்ந்து எனது படிப்புக்கு சாதிச் சான்றிதழ் இல்லாதது சிக்கலாகவே இருந்து வந்தது. டிப்ளமோவிலும் சாதிச் சான்றிதழ் கேட்டார்கள். இதனைத் தொடர்ந்து நான் படிப்பைத் தொடராமல் கைவிட்டுவிட்டேன். அதனைத் தொடர்ந்து வீட்டில்தான் இருந்தேன். கடந்த வருடம் அப்பா இறந்த பிறகுதான் எனக்கு சாதிச் சான்றிதழ் கிடைத்தது. அதன்பிறகு உடனிருந்தவர்கள் அளித்த உற்சாகத்தால் வாரி மெடிக்கல் அகாடமி நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்தேன்.

பயிற்சியில் சேர்ந்த சில நாட்களில் கரோனாவால் ஊரடங்கு வந்தது. என்னிடம் ஸ்மார்ட் போன் கிடையாது. இதனால் ஆன்லைன் வகுப்புகளில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. எனினும் அவர்கள் அளித்த புத்தகம் மற்றும் மாநில பாடத்திட்டப் புத்தகங்கள் கொண்டு தொடர்ந்து படித்தேன். கடந்த ஜூலை மாதம் மீண்டும் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டேன். அதன் பின்னர் நீட் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற்றேன்.

எனக்கு ஷிவா என்ற கார்டியன் இருக்கிறார். அவர்தான் நான் குழப்பத்தில் இருந்தபோதெல்லாம். உன்னால் முடியும், நீ சாதித்தால்தான் இங்குள்ள குழந்தைகளும் உன்னைப் பின்தொடர்வார்கள் என்று என்னை ஊக்கமளித்து தற்போதுவரை வழிநடத்தி வருகிறார்.

நீட் வெற்றிக்குப் பிறகு அம்மா, கிராமத்தினர் என்ன கூறினார்கள்?

அப்பா இல்லாமலும் நான் சாதித்தது அம்மாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த நாள்வரை இத்தனை சந்தோஷத்தை என் கிராம மக்கள் முகத்தில் நான் கண்டதில்லை. என் வெற்றி அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. நான் சாதித்ததுபோல் அவர்கள் பிள்ளைகளும் சாதிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளார்கள்.

நீட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ஒரு வெற்றியாளராக சங்கவி கூறுவது?

நீட் தேர்வு என்றாலே அச்சம் என்ற தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். உண்மையில் அந்த அச்சம் தேவையில்லை. உங்களால் அந்தத் தேர்வை எதிர்கொள்ள முடியும் என்று நீங்கள் உறுதியாக இருந்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். நான் பிளஸ் 2 முடித்து, நீட் தேர்வை 2018ஆம் ஆண்டு முதல் முறையாக எழுதும்போது சிரமத்தைச் சந்தித்தேன். மாநிலப் பாடத்திட்டத்துக்கும், நீட் பாடத்திட்டத்துக்கும் அவ்வளவு வேறுபாடு இருந்தது. இதனால் எனக்கு தேர்வு அப்போது கடினமாக இருந்தது. ஆனால் தற்போது நீட் பாடத்திட்டம் எனக்கு சற்று எளிமையாகவே இருந்தது. சரியான வழிகாட்டுதல் இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். தோல்வி ஏற்பட்டாலும் மீண்டும், மீண்டும் முயன்றால் வெற்றி கிடைக்கும்.

வெற்றி கிடைக்கவில்லையா? வருத்தம் வேண்டாம். நமக்குப் பிடித்த பிற துறைகளில் கவனம் செலுத்தலாம். நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொள்வதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. நீட் மட்டுமே வாழ்க்கை இல்லை. நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

உங்கள் சமூகத்தின் இளைய தலைமுறைக்கு நீங்கள் கூறுவது?

ஒன்றே ஒன்றுதான். கல்வி மட்டுமே நமக்கு மாற்றத்தைத் தரும். இதனை அவர்கள் உணரவேண்டும். இங்கிருக்கும் என்னைப் போன்றவர்கள் ஏதாவது ஒரு துறையில் ஜெயித்துவிட்டால் அது நான்கு குழந்தைகளுக்கு வழிகாட்டும். நான் மட்டுமே படித்துவிட்டால் போதாது. என்னைப் பார்த்து என் சமூகத்தில் நிறைய பேர் படிக்க வேண்டும். அதுதான் என் படிப்புக்கான வெற்றியும்கூட...

எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் நமக்குக் கிடைத்துள்ள வாய்ப்பை நாம் நழுவ விடக் கூடாது. எந்தத் தடை வந்தாலும் நாம் கடந்து வரவேண்டும்.

சங்கவியின் கனவு?

நான் இங்குள்ள மக்களின் கஷ்டத்தைப் பார்த்திருக்கிறேன். மருத்துவராகி இங்குள்ள மக்களுக்கு இலவசமாக மருத்துவ வசதி அளிக்க வேண்டும் என்பதுதான் என் கனவு. இங்கு மட்டுமல்லாமல் அனைத்து கிராமங்களுக்கும் இலவசமாக மருத்துவ வசதி வழங்குவதுதான் எனது ஆசை. நான் இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டதற்கு எனக்குக் கிடைக்கும் பரிசும் இதுதான்.

உங்கள் கிராமம் சார்ந்து நீங்கள் அரசுக்கு வைக்கும் கோரிக்கை?

மலசர் இன மக்களைப் பொறுத்தவரை இங்குள்ள அவ்வளவு எளிதாக வெளியுலகத்துக்கு வரமாட்டார்கள். இங்குள்ள மக்கள் விவசாயக் கூலி வேலைகளைச் செய்துகொண்டு பழகிவிடுவார்கள். இதனால் அவர்களுக்குக் கல்வியின் முக்கியத்துவம் தெரிவதில்லை. குழந்தைகளும் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே கைவிடும் சூழலும் நடக்கிறது. அரசாங்கத்தால் மட்டுமே இங்குள்ள மக்களுக்கு உதவ முடியும்.

தற்போதுதான் அரசு உதவிகள் இங்கு வரத் தொடங்கியுள்ளன. இந்த நிலை தொடர வேண்டும். இங்குள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அதனை நிறைவேற்றித் தர வேண்டும். எங்கள் கிராமத்தில் இணைய சேவை சுத்தமாக இல்லை. அரசு இதனைச் செய்து கொடுத்தால் மாணவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

முதல்வர் உத்தரவின் பேரில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடி அமைச்சர் கயல்விழி என்னை நேரில் சந்தித்து என் படிப்பிற்கு அரசு நிச்சயம் உதவும் என்று உறுதியளித்தார். என்னை ஊக்கப்படுத்துவதற்காக ஒரு லேப்டாப்பும் வழங்கினார். அரசு நிச்சயம் உதவும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு சங்கவி பதிலளித்தார்.

இப்பேட்டியில், தன்னைப் பற்றிக் கூறியதைவிட சங்கவி அதிகம் உச்சரித்த வார்த்தைகள்: ''எனது சமூகக் குழந்தைகள் படிக்க வேண்டும். அவர்கள் வெற்றி பெற வேண்டும்'' என்பதே. சங்கவியின் இக்கனவு நிறைவேறட்டும்.

தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x