Published : 06 Nov 2021 03:06 AM
Last Updated : 06 Nov 2021 03:06 AM
திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. வரும் 9-ம் தேதி பக்தர்கள் பங்கேற்பின்றி சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது.
கரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கந்த சஷ்டி விழாவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா நேற்று முன்தினம் தொடங்கியது. அன்று காலை 6.30 மணிக்கு யாகசாலை பூஜையில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். யாகசாலையில் சிவன்,பார்வதிக்கு உரிய பிரதான கும்பங்களும், சுவாமி, ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்குரிய கும்பங்கள் மற்றும் பரிவார கும்பங்கள் வைக்கப்பட்டிருந்தன. பகல் 12 மணிக்கு யாகசாலையில் மகாதீபாராதனை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். மாலை 4.30 மணிக்கு திருவாவடுதுறை சஷ்டிமண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளியதும், அங்கு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. தங்கத் தேர் உலா ரத்து செய்யப்பட்டது.
தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்படி அதிகாலை 5 மணிக்குபிறகுதான் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆன்லைன் மூலம் பதிவு செய்த5 ஆயிரம் பக்தர்கள், நேரடியாகவந்த 5 ஆயிரம் பக்தர்கள் என10 ஆயிரம் பேர் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். கோயில் வளாகத்தில் விரதமிருக்க அனுமதியில்லாததால் உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் ஆகியவை வெறிச்சோடி காணப்பட்டன.
வரும் 8-ம் தேதி வரை அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தொடர்ந்து தீபாராதனை நடைபெறும். 8-ம் தேதி வரை தினமும் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி உண்டு.
முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா வரும் 9-ம் தேதி கோயில் கடற்கரை முகப்பில் கடந்த ஆண்டைப் போல் சுற்றிலும் மறைக்கப்பட்ட சிறிய பகுதிக்குள் நடத்தப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.
மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருள்கிறார். பின்னர் கோயிலை ஒட்டிய கடற்கரை முகப்பில் வைத்து சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
வரும் 10-ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணத்தில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT