Published : 06 Nov 2021 03:06 AM
Last Updated : 06 Nov 2021 03:06 AM
பூண்டி ஏரியிலிருந்து கடந்த 3-ம் தேதி முதல், விநாடிக்கு 2 ஆயிரம்கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 3-ம்தேதி இரவு, திருவள்ளூர் அருகேமெய்யூர், மொன்னவேடு பகுதியில்இருந்த தரைப்பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது.
இதனால், 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சேதமடைந்த தரைப்பாலத்தையும், பாலம் சீரமைக்கும் பணிகளையும் நேற்று பால்வளத் துறை சா.மு.நாசர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தரைப் பாலத்தை உடனடியாக சீரமைக்கும் பணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிரமாக நடந்து வருகிறது.
தற்போது மழை குறைந்துள்ளதால் பூண்டி ஏரியிலிருந்து, விநாடிக்கு 974 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இது மேலும் குறைய வாய்ப்புள்ளது. ஆகவே, சேதமடைந்த தரைப்பாலம் சீரமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று, விரைவில் முடிவுக்கு வரும்.
இப்பகுதியில் ரூ.14.95 கோடி மதிப்பில் பாலம் அமைக்கும் பணிகடந்த ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. இன்றைய நிலவரப்படி இப்பணி 70 சதவீதம் முடிந்திருக்க வேண்டும். ஆனால், 20 சதவீத பணிகள் கூட முடிவடையவில்லை. ஆகவே, பாலம் அமைக்கும் பணிகளை 6 மாதத்துக்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும், பூண்டி ஏரியின் நீர் இருப்பு குறித்தும் பால்வளத் துறைஅமைச்சர் நேற்று நேரில் ஆய்வுசெய்து, நீர்வளத் துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார்.
இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT