Published : 19 Mar 2016 03:14 PM
Last Updated : 19 Mar 2016 03:14 PM
திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி, ராதாபுரம் தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று திமுகவும், காங்கிரஸும் மல்லுக்கட்டி வருகின்றன. இத்தொகுதியில் ஏன் போட்டியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி தங்கள் கட்சிகளின் தலைமைக்கு அக்கட்சியினர் மனுக்களையும் அனுப்பி வருகிறார்கள்.
நாங்குநேரி தொகுதி 1952, 1967 தேர்தல்களின்போது காங்கிரஸ் வசம் இருந்தது. அதன்பின் 2006 சட்டப் பேரவைத் தேர்தலில்தான் அக்கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்ட எச்.வசந்தகுமார் வெற்றிபெற்றிருந்தார். இம்மூன்று முறை மட்டுமே காங்கிரஸ் இத்தொகுயில் வெற்றி பெற்றுள்ளது.
இதுபோல் இத் தொகுதியில் 1971, 1989-ம் ஆண்டு தேர்தல்களில் திமுக வெற்றிபெற்றிருந்தது. கடந்தமுறை இத்தொகுதியில் அதிமுக கூட்டணியில் இருந்த சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் ஏ.நாராயணன் வெற்றி பெற்றிருந்தார்.
தற்போது திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இரு கட்சிகளும் இத்தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. இத் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் மீண்டும் வசந்தகுமார் வாய்ப்பு கேட்டிருக்கிறார். அக்கட்சியை சேர்ந்த மேலும் சிலரும் விருப்ப மனு அளித்து நேர்காணலில் பங்கேற்றுள்ளனர்.
திமுக சார்பில் போட்டியிட ஞானதிரவியம், பெல், சித்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் வாய்ப்பு கேட்டு நேர்காணலுக்கும் சென்று திரும்பியிருக்கிறார்கள். இத்தொகுதியை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் இரு கட்சியினரும் காய்களை நகர்த்தி வருகிறார்கள்.
ராதாபுரம் தொகுதி
இதுபோல் ராதாபுரம் தொகுதிக்கும் இரு கட்சியினரும் போட்டிபோட்டு கொண்டிருக்கிறார்கள். இத் தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன் திருநெல்வேலியில் வண்ணார் பேட்டையிலுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன் ரத்த கையெழுத்திட்ட மனுவை காமராஜர் சிலைக்கு வழங்கும் நூதன போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டனர். இதன் பின்னணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய இணையமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் இருப்பதாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கோட்டை
ராதாபுரம் தொகுதியில் பலமுறை காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற்றிருக்கிறார்கள். 1957, 1962, 1967, 1989, 1991-ம் ஆண்டுகளில் காங்கிரஸ் வெற்றிபெற்றிருக்கிறது. இதுபோல் 1996-ல் தமாகா சார்பில் போட்டியிட்ட எம்.அப்பாவு வெற்றி பெற்றிருக்கிறார். இதுதவிர 1980, 1984-ம் ஆண்டுகளில் இத் தொகுதியில் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் வெற்றிபெற்றிருக்கிறது. 1996-ல் இத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி 2-ம் இடத்தை பிடித்திருந்தது. அதேநேரத்தில் இத் தொகுதியில் திமுக இதுவரை இரு தேர்தல்களில்தான் வெற்றி பெற்றிருக்கிறது. இத் தொகுதியில் எம்.அப்பாவு 2001-ல் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார். 1996-ல் அவர் தமாகா சார்பிலும், 2006-ல் திமுக சார்பிலும் அவர் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். இதனால் இம்முறை திமுக சார்பில் இத் தொகுதியில் அவர் மீண்டும் நிறுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
தொடர் போராட்டம்
இந்நிலையில்தான் இத்தொகு தியை தங்களுக்கு கேட்டு காங்கிரஸார் போராட்டங்களை தொடங்கி யிருக்கிறார்கள். இத்தொகுதி காங் கிரஸ் கோட்டை என்பதால் அதை காங்கிரஸுக் குத்தான் ஒதுக்க வேண்டும் என்பது அக் கட்சியினரின் வாதம். ஆனால் இத் தொகுதியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள அப்பாவு நிறுத்தப்பட்டால் வெற்றி எளிதாகும் என்பது திமுக தரப்பு வாதம். அப்பாவுவைப்போல் திமுகவில் வேறு கட்சியினர் சிலரும் இத் தொகுதிக்கான நேர்காணலில் பங்கேற்று திரும்பியிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி சார்பில் வேல்துரை, சிவாஜி முத்துக்குமார் உள்ளிட்டோர் இத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளதாக அக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாங்குநேரி, ராதாபுரம் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு நிலவரம் குறித்து அந்தந்த கட்சி தலைமைகள் அலசி ஆராய்ந்து வேட்பாளர்களை நிறுத்த தயாராகி வரும் நிலையில் தொகுதிகளை ஒதுக்க கேட்டு திமுகவும், காங்கிரஸும் முட்டிமோதுவது திருநெல்வேலி மாவட்ட தேர்தல் திருவிழாவில் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT