Published : 05 Nov 2021 07:19 PM
Last Updated : 05 Nov 2021 07:19 PM
புதுச்சேரி அருகே கோட்டக்குப்பம் வெடி விபத்து சம்பவத்தின் எதிரொலியாக புதுச்சேரி பட்டாசுக் கிடங்குகளில் சீனியர் எஸ்.பி. நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி அருகே உள்ள தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியில் நாட்டு வெடிகள் வெடித்ததில் பைக்கில் சென்ற தந்தை, மகன் உடல் சிதறி உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், புதுச்சேரியிலிருந்து விற்பனைக்காக நாட்டு வெடிகளை உரிய பாதுகாப்பின்றி எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இந்நிலையில், புதுச்சேரி மேற்குப் பகுதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரிக்கலாம்பாக்கம், கோர்காடு, சன்னியாசிக்குப்பம், திருக்கனூர் உள்ளிட்ட 6 இடங்களில் உள்ள நாட்டு வெடிகள் தயாரிக்கும் தொழிற்கூடங்கள் மற்றும் பட்டாசுக் கிடங்குகளில் சீனியர் எஸ்.பி. லோகேஸ்வரன் தலைமையில் மேற்குப் பகுதி எஸ்.பி. ரங்கநாதன் மற்றும் போலீஸார் இன்று (நவ. 5) சோதனையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, பட்டாசு தயாரிக்கும்போது மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு வழிமுறைகளைக் கேட்டறிந்ததுடன், அங்கிருந்த இருப்புகள், யார், யாருக்குப் பட்டாசு, வெடிமருந்து விநியோகம் செய்யப்பட்டது என்பது குறித்த விவரங்களையும் சேகரித்தனர். தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி எடுத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர். உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரித்தாலும், உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாவிடினும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
பின்னர் இது தொடர்பாக எஸ்.பி. ரங்கநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘‘வெடி விபத்தினால் இரண்டு பேர் மரணமடைந்தனர். இதன் எதிரொலியாக மேற்குப் பகுதி காவல் சரகத்துக்குட்பட்ட 6 இடங்களில் பட்டாசு தொழிற்கூடங்கள், பட்டாசு குடோன்களில் ஆய்வு மேற்கொண்டோம். இந்த 6 இடங்களில் ஒரு இடத்தில் மட்டும் 1 கிலோ வெடிமருந்து இருந்தது. மற்ற இடங்களில் பட்டாசு இருப்பு இல்லை. வெடி தயாரிப்பவர்களுக்குப் பல்வேறு ஆலோசனைகளைக் கூறியுள்ளோம். இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும். உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அரசு கூறியுள்ள கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட பொருட்களை மட்டுமே வெடி தயாரிக்கப் பயன்படுத்த வேண்டும். அது அல்லாத வேறு பொருட்களைப் பயன்படுத்தினால் வெடி விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ரவுடிகள், சட்ட விரோத கும்பல் வெடிபொருட்கள் கேட்டால் கொடுக்கக் கூடாது. திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு பட்டாசு கேட்டால் சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாகவே சென்று கொடுத்துவிட்டு வரவேண்டும். மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’.
இவ்வாறு எஸ்.பி. ரங்கநாதன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT