Last Updated : 05 Nov, 2021 06:46 PM

1  

Published : 05 Nov 2021 06:46 PM
Last Updated : 05 Nov 2021 06:46 PM

ஆம்பூர் அருகே தூய்மைப் பணியாளர்களுக்குப் பாத பூஜை செய்த ஊராட்சி மன்றத் தலைவர்

திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே தூய்மைப் பணியாளர்களுக்குப் பாத பூஜை செய்து மாலை அணிவித்து துப்புரவுப் பணிகளை ஊராட்சி மன்றத் தலைவர் இன்று தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வட்டம், வடபுதுப்பட்டு ஊராட்சியில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவராக ஜெயலட்சுமி (42) என்பவர் வெற்றி பெற்றார். கூலி வேலை செய்து வந்த ஜெயலட்சுமியை ஊராட்சி மன்றத் தலைவராக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வாக்களித்துத் தேர்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தனது பணிகளை ஜெயலட்சுமி இன்று தொடங்கினார்.

ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு இன்று காலை வந்த ஜெயலட்சுமி ஊராட்சியில் தூய்மைப் பணியாளர்களாக வேலை செய்து வரும் 15 பேரை வரவழைத்தார். அவர்களுக்கு மாலை அணிவித்து, அவர்களது பாதங்களுக்குத் தண்ணீர் ஊற்றி, மஞ்சள், குங்குமம் வைத்து சிறப்புப் பாத பூஜை செய்தார். பிறகு, ''திருப்பத்தூர் மாவட்டத்திலேயே தூய்மையான ஊராட்சியாக வடபுதுப்பட்டு ஊராட்சி திகழ வேண்டும். அதற்காகவே தங்களது பாதங்களைத் தொட்டு பாத பூஜை செய்துள்ளேன். எந்த ஒரு ஊராட்சியாக இருந்தாலும், அங்கு அர்ப்பணிப்போடு பணி செய்பவர்களின் தூய்மைப் பணியாளர்களே முதன்மையாக உள்ளனர். எனவேதான் இப்படி ஒரு சிறப்பு உங்களுக்குச் செய்யப்பட்டுள்ளது.

தினமும் உங்கள் பணிகளை நீங்கள் கவனமுடன் மேற்கொள்ள வேண்டும். ஊராட்சியில் பல்வேறு இடங்களில் சேரும், குப்பைக் கழிவுகள், கழிவுநீர்க் கால்வாய், மழைநீர் சகதி என எதுவாக இருந்தாலும், மனம் தளராமல் அவற்றைத் தூய்மைப்படுத்தி ஊராட்சியைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். உங்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், அடிப்படை வசதிகள் ஆகியவற்றை விரைவாகச் செய்து தர ஏற்பாடு செய்யப்படும்'' எனக் கூறினார்.

இதைக் கேட்ட தூய்மைப் பணியாளர்கள் நெகிழ்ச்சியடைந்தனர். பெண் தூய்மைப் பணியார்கள் கண்ணீர் சிந்தி, தங்களது அன்றாடப் பணிகளைச் சிறப்பாகச் செய்வோம் எனக் கூறினர். ஊராட்சி மன்றப் பெண் தலைவர் தூய்மைப் பணியாளர்களுக்குப் பாத பூஜை செய்த காட்சி சமூக வலைதளங்களில் நேற்று வேகமாகப் பரவி வைரல் ஆகி பலரது லைக்குகளை அள்ளியது.

இது சுய விளம்பரத்துக்காகச் செய்யப்பட்டுள்ளது அல்ல, ஊராட்சியாக இருந்தாலும், நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சியாக இருந்தாலும் சரி அங்கு பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுடன் சுமுக உறவை ஏற்படுத்தி அவர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்க வேண்டும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை நாம் செய்தால் மக்களுக்குத் தேவையான பணிகளை அவர்கள் தாமாக முன்வந்து செய்வார்கள் என ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயலட்சமி விளக்கம் அளித்தார். இது அப்பகுதி மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x