Published : 05 Nov 2021 05:42 PM
Last Updated : 05 Nov 2021 05:42 PM
தீபாவளி தொடர் விடுமுறையால் கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். சூரிய உதயம், சூரிய அஸ்தமன காட்சிகளைப் பார்வையிடும் மையங்கள் களைகட்டியுள்ளன.
சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் கரோனா ஊரடங்கிற்குப் பின்னர் அரசின் கட்டுப்பாடு விதிமுறைகளால் இரு ஆண்டுகளாக சுற்றுலாப் பயணிகள் வரவில்லை. இதனால் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகப் படகு இல்லம், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, சூரிய உதயம், அஸ்தமன மையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
ஊரடங்கு தளர்விற்குப் பின்னரும் குறைந்த அளவிலே சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரி வந்தனர். இதனால் சுற்றுலாவை நம்பியிருந்த அரசுத் துறை, தனியார் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. நடைபாதை வியாபாரிகளில் இருந்து பிற வர்த்தகர்கள் வரை மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் இழந்தனர்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகை மற்றும் அதற்கு அடுத்த நாளான இன்று, சனி, ஞாயிறு எனத் தொடர்ந்து 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்துள்ளனர். உள்ளூர் பயணிகள் மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்தோர் சுற்றுலா திட்டம் வகுத்து, குடும்பத்துடன் கன்னியாகுமரி வந்துள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கும் 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை உள்ளதால் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா மையங்கள் அனைத்தும் களைகட்டியுள்ளன. கடல் சீற்றம் இருந்ததால் முக்கடல் சங்கமத்தில் நீராடும் சுற்றுலாப் பயணிகளை அங்கு பாதுகாப்பிற்கு நின்ற போலீஸார் வெகுநேரம் கடலுக்குள் நிற்க வேண்டாம் என எச்சரித்து அனுப்பினர்.
குறிப்பாகத் தொடர் மழையால் மேகமூட்டத்தால் சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் போன்றவை ஒரு வாரமாகத் தென்படவில்லை. நேற்றில் இருந்து இயல்பான வானிலை நிலவுவதால் சூரிய உதயம் தெளிவாகத் தென்படுகிறது. இதனால் முக்கடல் சங்கமம், காட்சி கோபுரம், சூரிய அஸ்தமன மையம் போன்ற இடங்களில் சூரிய உதயம், சூரிய அஸ்தமனத்தைக் காண்பதற்கு ஆயிரக்கணக்கானோர் குவிந்து வருகின்றனர். தொடர் விடுமுறைகளால் கன்னியாகுமரியில் அரசு, மற்றும் தனியார் தங்கும் விடுதிகள், விருந்தினர் மாளிகைகள் நிரம்பியுள்ளன. இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலாவை நம்பியுள்ள வியாபாரிகள், விடுதி உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், திருப்பதி தேவஸ்தான வெங்கடாசலபதி கோயில், விவேகானந்த கேந்திராவில் ராமாயணக் கண்காட்சிக் கூடம், படகு இல்லம் ஆகிய இடங்களில் இரு ஆண்டுகளுக்குப் பின்னர் சுற்றுலாப் பயணிகள் நிரம்பிக் காணப்பட்டனர். கரோனா பரவல் குறைந்திருப்பதால் சுற்றுலா சார்ந்த கட்டுப்பாடுகளைக் கன்னியாகுமரியில் தளர்த்த வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT