Published : 05 Nov 2021 05:27 PM
Last Updated : 05 Nov 2021 05:27 PM
பேபி அணையைப் பலப்படுத்திய பிறகு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் 2014-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இருப்பினும் அணை குறித்த பல்வேறு சர்ச்சைகளைக் கூறி கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் 2014, 2015, 2018 என்று மூன்று முறை மட்டுமே 142 அடிக்கு நீர் தேக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நீர்ப்பிடிப்புப் பகுதியில் கனமழை பெய்து நீர்மட்டம் 138.70 அடியாக உயர்ந்தது. அணையின் பலம் குறித்து சர்ச்சையைக் கிளப்பிய கேரளா கடந்த 29-ம் தேதி தங்கள் மாநிலத்திற்குத் தண்ணீரைத் திறந்துவிட்டது. நீர்திறப்பு உரிமை தமிழகத்திடம் உள்ள நிலையில் கேரளாவின் தன்னிச்சையான போக்கு குறித்து தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஐந்து மாவட்ட விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்கத் தொடங்கினர். அதிமுக, அமமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இதற்குக் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பெரியாறு அணையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதற்காக மதுரையில் இருந்து தேக்கடி வந்த அமைச்சர் துரைமுருகன், அங்கிருந்து படகு மூலம் அணைப் பகுதிக்குச் சென்றார். நீர்வரத்து, மதகு, கசிவுநீர் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.
பின்பு மீண்டும் தேக்கடிக்கு வந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''பதவியேற்றபோதே தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளையும் ஆய்வு செய்யத் திட்டமிட்டிருந்தேன். கரோனா காலம் என்பதால் உடனடியாகப் பணியைத் தொடங்க முடியவில்லை. ஆழியாறு உள்ளிட்ட அணைகளை அடுத்தடுத்து ஆய்வு செய்ய உள்ளேன். பெரியாறு அணையில் 30 ஆண்டு நீர்வரத்தைக் கணக்கிட்டு உச்ச நீதிமன்றம் மாதாந்திர நீர்நிறுத்தப் பட்டியலை (ரூல்கர்வ்) வெளியிட்டுள்ளது. இதன்படியே அணையின் நீர் தேக்கப்பட்டும், வெளியேற்றப்பட்டும் வருகிறது.
இதன்படி தற்போது 139.50 அடி நீர் தேக்கப்பட்டுள்ளது. வரும் 30-ம் தேதி 142 அடிக்கு உயர்த்தப்படும். பேபி அணையைப் பலப்படுத்திவிட்டு 152 அடிக்கு நீரை நிலைநிறுத்த உச்ச நீதிமன்றம் 2014-ம் ஆண்டு தீர்ப்பளித்துள்ளது.
எனவே ஆய்வில் பேபி அணையைப் பார்வையிட்டேன். அங்குள்ள 3 மரங்களை அகற்றினால்தான் பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள முடியும். இவற்றை அகற்றக் கேரள அரசிடம் கேட்டபோது, மத்திய வனத்துறைதான் அனுமதிக்க வேண்டும் என்கின்றனர். 3 மரங்களை வெட்டுவதற்கு அதிமுகவால் 7 ஆண்டுகளாக முடியவில்லை. நாங்கள் வந்து 6 மாதங்கள்தான் ஆகின்றன. விரைவில் அனுமதி பெற்றுவிடுவோம்.
மரங்களை அகற்றி பேபி அணையைப் பலப்படுத்தும் பணி விரைவில் தொடங்கும். அதன்பின்பு 152 அடி அளவிற்கு நீர்மட்டம் உயர்த்தப்படும். தமிழகத்தில் இருந்து தற்போது அதிகபட்சமாக விநாடிக்கு 2 ஆயிரத்து 500 கன அடி நீர்தான் எடுக்க முடிகிறது. கூடுதல் நீர் பெற இருமாநில அரசுகளும் கலந்து பேசிய பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்.
முல்லைப் பெரியாறு அணை குறித்துப் பேசுவதற்கு முன்னாள் முதல்வர் பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு தார்மீக உரிமை கிடையாது. இரண்டு பேரும் மாறிமாறிப் பொதுப்பணித்துறை அமைச்சர்களாக இருந்துள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளில் அந்தத் துறை அமைச்சர்கள் ஒருவர் கூட இந்த அணையைப் பார்வையிட்டு ஆய்வு செய்யவில்லை.
80 வயதிலும் தட்டுத்தடுமாறி வந்து ஆய்வு செய்துள்ளேன். எடப்பாடி பழனிசாமி சேலத்தைச் சேர்ந்தவர். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவராவது ஆய்வு செய்திருக்கலாம். அப்போது அணையைக் கவனிக்காமல் விட்டுவிட்டு இப்போது உண்ணாவிரதம் இருக்கப்போவதாகக் கூறுவதைப் பார்த்து நாடே சிரிக்கிறது. பக்கத்து மாநிலத்துடன் சுமுகமாக இருந்தால்தான் பிரச்சினைகளை எளிதில் தீர்க்கலாம். தமிழகம் சார்பில் அணைக்கு அதிவேகப் படகுகள் வாங்கப்படும்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் மீது எனக்கு மரியாதை உண்டு. அவரைத் தனிப்பட்ட முறையில் நன்கு அறிவேன். அவர் முதல்வராக இருக்கும்போதே முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும்''.
இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT