Published : 05 Nov 2021 04:44 PM
Last Updated : 05 Nov 2021 04:44 PM
திருப்பூர் மாநகரில் குடியிருப்புப் பகுதிக்குள் 3 இடங்களில் தண்ணீர் புகுந்ததால், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி 19-வது வார்டு மும்மூர்த்தி நகர், கருப்பராயன் நகர் பகுதியில் நேற்று முன் தினம் இரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை பெய்ததால், பல்வேறு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் சாலையில் திரண்டனர்.
இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் கூறும்போது, ''எங்கள் பகுதியில் நூற்றுக்கணக்கில் குடியிருப்புகள் உள்ளன. தொடர் மழையால் 60-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் இரவு முழுவதும் பலர் தூங்காமல், வீட்டில் இருந்த கட்டில் மற்றும் சேர் உள்ளிட்டவற்றில் அமர்ந்தனர். தீபாவளி பண்டிகை என்பதால் பல வீடுகள் பூட்டியிருந்தன. இதனால் எவ்வளவு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது என்பதைக் கணிக்க முடியவில்லை.
வீட்டில் இருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வீணாகின. தாய்மார்கள் பலரும் குழந்தைகளைத் தூங்கவைக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஏற்கெனவே 4 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்று நிலை ஏற்பட்டது. அதன் பின்னரும் எங்கள் பிரச்சினை தீர்க்கப்படாததால் தற்போது பெரும் அவதியைச் சந்தித்துள்ளோம். பாண்டியன் நகர் மேட்டுப்பகுதி மற்றும் பூலுவபட்டி சுகாதாரத்துறை அலுவலகம் அருகில் உள்ள நீர் வழிப்பாதையில் இருந்து வரும் வெள்ளநீர் வெளியேற வழியின்றி, எங்கள் பகுதிக்குள் புகுந்துவிடுகிறது. இதனைச் சரிசெய்ய வலியுறுத்தியும் எங்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தித் தரக் கோரியும் இங்கு திரண்டுள்ளோம்.
தற்போது மழை நீருடன், கழிவு நீரும் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்திருப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அதேபோல் தற்போது கொசு தொந்தரவும் அதிகரித்துள்ளது. ஆகவே, இவற்றைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு வசிக்கும் பலரும் பின்னலாடை நிறுவனங்களில், தினக்கூலிகளாக வேலை செய்து வருபவர்கள். ஆகவே அவர்களின் நிலை கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வடக்கு வட்டாட்சியர் ஜெகநாதன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். உரிய ஏற்பாடுகள் செய்து தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்து கலைந்தனர். இதையடுத்து வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை, மோட்டார் மூலம் உறிஞ்சி அப்புறப்படுத்தும் நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொண்டது.
மாநகராட்சி ஆணையர் ஆய்வு
திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ள பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அங்கு இருந்த மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அந்தப் பகுதியில் இருந்தவர்களை, மும்மூர்த்தி நகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. உணவு, மருத்துவ வசதி, குடிநீர், கழிப்பிடம் மற்றும் பிற அடிப்படை வசதிகளை வழங்கவும் ஆணையர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அம்மன் நகர்- அறிவொளி நகர்
அதேபோல் திருப்பூர் மாநகராட்சி 7-வது வார்டு அம்மன் நகர், மகாவிஷ்ணு நகர், ஜெ.எஸ்.கார்டன் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அப்பகுதியில் உள்ள சாக்கடைக் கால்வாய் குறுகிய அளவில் இருப்பதால் மழை நீர் செல்ல வழியின்றி வீடுகள் மற்றும் தெருக்களுக்குள் தண்ணீர் புகுந்தது. குறிப்பாக அம்மன் நகர் பகுதியில் ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
அதேபோல் கஞ்சம்பாளையம் அறிவொளி நகர் பகுதியிலும் ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT