Published : 04 Nov 2021 04:51 PM
Last Updated : 04 Nov 2021 04:51 PM
நடந்து முடிந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்கள் முடிவுகள் மத்தியில் ஆளும் மத்திய அரசுக்கு எதிரான மக்கள் தீர்ப்பே. இது பாஜக ஆட்சிக்கு எச்சரிக்கை மணி என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது அறிக்கை வருமாறு:
13 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் உள்பட 29 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் 3 மக்களவைத் தொகுதிகளுக்கு சென்ற அக்டோபர் 30 ஆம் தேதியன்று (30.10.2021) வெளியான தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகின்றன?
ஒன்றிய அரசுக்கு எதிராக மக்கள் காற்று!
பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் பாஜக ஆட்சி மற்றும் மாநிலங்களில் நடைபெறும் பாஜக ஆட்சிகள் ஆகியவற்றிற்கு மிகப்பெரிய எச்சரிக்கை மணியடித்து, அவர்களது ஆளுமையின் மீது மக்களின் அதிருப்தி, எதிர்ப்பு நாளும் மலை உச்சிக்குச் சென்று கொண்டுள்ளது என்பது சுவரெழுத்துக்களாக பளிச்சிடுகின்றன. (பல முடிவுகளை தனியே கட்டம் கட்டி அறிவித்துள்ளோம், காண்க).
பொதுவாக, இடைத்தேர்தல்களில் பெரிதும் ஆளும் கட்சிகளுக்கே வெற்றி வாய்ப்பு ஏற்படுவது எதிர்பார்க்கக் கூடியதே; காரணம், ஆட்சி - அதிகாரம் பலம் மற்ற சில வசதிகள், எதிர்க்கட்சி- ஆளுங்கட்சி இடையே ஒரு சமமான போட்டியை ஏற்படுத்துவது இல்லை என்பதே யதார்த்தமாகும்.
ஆனால், இப்போது பல மாநிலங்களில் அதிலும் பெரிதும் பாஜக ஆளும் மாநிலங்களில், அது தோல்விகளைப் பெற்றிருப்பதும், எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் போன்ற கட்சிகள் வெற்றி பெற்று வருவதும் - காற்று ஆளுங்கட்சிக்கு எதிர்திசையில் வீசத் தொடங்கியுள்ளது என்பதைப் பட்டாங்கமாய் பிரகடனப்படுத்துவதாகவே உள்ளது.
மேற்கு வங்கத்தில் பாஜக அடிமேல் அடி வாங்கி எழவே முடியாமல் திணறுகிறது, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தாவிடம்!
பிரதமரின் ‘சப்கா சாத், சப்கா விகாஸ்’ முழக்கம் என்னாயிற்று?
2014 இல் பிரதமர் மோடி ஆட்சிக்கு வருமுன் கூறிய ‘சப்கா சாத், சப்கா விகாஸ்’ என்ற வளர்ச்சி, முன்னேற்றம் நீர்மேல் எழுதிய எழுத்துகளாகிவிட்டன என்பதை அனைத்துத் தரப்பு மக்களும் உணர ஆரம்பித்துவிட்டனர்.
ஒவ்வொரு தனி நபருக்கும் 15 லட்சம் ரூபாய் வங்கிக் கணக்கில் போடுவது, ஓராண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்பன நிறைவேற்றப்பட்டிருந்தால், கரோனா கொடுந்தொற்று காலத்தில்கூட வறுமையில், வேலை இல்லாத் திண்டாட்டத்தால், ஏழை, எளிய நடுத்தர மக்கள் இந்த அளவு பாதிக்கப்பட்டிருப்பார்களா?
கரோனா காலத்தில் வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை பெருத்தது! வேலை இல்லாத் திண்டாட்டம் நாளும் வெகுவாக வளர்ந்தது!
விலைவாசிகள் உயர்வு
விலைவாசி ஏற்றம் விண்ணை முட்டியது. இல்லத்தரசிகள் கண்ணீர் நாளும் பெருகி ஓடுகிறது; கேஸ் - எரிவாயு விலையேற்றம்; பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் என்ற நிலை நாளும் தொடர்கிறது. (இன்றுதான் ஒட்டகத்தின் முதுகில் உள்ள வைக்கோல் பொதியில் ஒரு சில பிரிகளை எடுத்து ஒட்டகத்தை ஏமாற்றும் கதைபோல, 5 ரூபாய் பெட்ரோலுக்கும், 11 ரூபாய் டீசலுக்கும் ‘வாட்’ மதிப்புக் கூட்டு வரியில் ஒன்றிய அரசு குறைத்தல் போன்ற அறிவிப்புகள் அரங்கேறி உள்ளன!).
மாநிலங்கள் உரிமை பறிப்பு, விவசாயிகள் வேதனை நாளும் வளர்பிறையாகியுள்ள கொடுமை! இப்படி ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.
சமூகநீதிப் பிரச்சினை மற்றும் அந்நிய நாட்டின் உளவு பார்க்கும் ஆபத்துமூலம் தனிமனித ரகசியப் பறிப்புபற்றிய கண்டனங்கள் எல்லாம் உச்சநீதிமன்றம்மூலம் வெளிச்சத்திற்கு வந்து, மக்கள் தீர்ப்புகளாக மலருகின்றன! இவற்றை வெறும் வார்த்தை ஜாலங்களாலோ, வித்தைகளாலேயோ சரி செய்துவிட முடியாது.
உருப்படியான மக்கள் உரிமைப் பாதுகாப்பு மூலம்தான் சரிப்படுத்த முடியும். இந்தக் கரோனா காலத்திலும் நாள் ஒன்றுக்கு 1000 கோடி ரூபாய் அதானிகள் வருமானம்என்பதுதான் ‘சப்கா விகாஸா?’ என்று மக்கள் கேள்வி எழுப்புவதுதான் இந்தத் தேர்தல் முடிவுகளின் பிரதிபலிப்பு.
வாக்குறுதிகளை நிறைவேற்றட்டும்!
எனவே, இனியாவது வாக்காளர்களை ஏமாற்றாமல், ஆட்சியாளர்கள் முன்பு அளித்த உருப்படியான, ஆக்கபூர்வ தேர்தல் வாக்குறுதிகளையும், அரசமைப்புச் சட்டம்மீது எடுத்த பிரமாணத்தையும் காப்பாற்றிட இந்த எச்சரிக்கை மணியோசை பயன்படுமாக.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT