Published : 04 Nov 2021 03:11 AM
Last Updated : 04 Nov 2021 03:11 AM
தஞ்சாவூர்/திருவாரூர்/கடலூர்/விழுப்புரம்
டெல்டா மாவட்டங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கி விடிய விடிய கனமழை பெய்தது. தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கின.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதலாக டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து இரவு நேரங்களிலும், பகலில் அவ்வப்போதும் மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. இதனால், தஞ்சாவூர் மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டுள்ள சம்பா இளம் நெற்பயிர்களில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் மழை நீரில் மூழ்கியது.
இதேபோல, திருவாரூர் மாவட்டத்தில் 30 ஏக்கர் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. மேலும், குறுவை அறுவடையும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பது குறைக்கப்பட்டாலும், வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.
கடலூரில் விடியவிடிய மழை
கடலூர் மாவட்டத்தில் விடியவிடிய பெய்த கனமழையால் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று முழுவதும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்தது. அயன்குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள தாழை வாய்க்காலில் போடப்பட்டிருந்த குழாய் பாலம் மற்றும் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கல்குணம்- திருவெண்ணெய்நல்லூர் தரைப் பாலம் ஆகியவை உடைந்து மழை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன.
புதுச்சத்திரம் அருகே உள்ள பூவாலை, அலமேல்மங்காபுரம், சேந்திரக்கிள்ளை, மணிக்கொல்லை, வயலாமூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. சற்று தாழ்வான பகுதிகளில் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, குமராட்சிஉள்ளிட்ட இடங்களிலும் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அழகு பெருமாள் குப்பம் ஊராட்சியில் குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரத்திலும் கனமழை
விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று அதிகாலை வரை விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது. இதனால் விழுப்புரத்தில் திருச்சி, சென்னை நெடுஞ்சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ள நீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT