Published : 17 Mar 2016 03:42 PM
Last Updated : 17 Mar 2016 03:42 PM
திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போதைய 9 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இவர்கள் அனைவருமே தங்களது கட்சிகளிடம் விருப்பமனு தாக்கல் செய்துவிட்டு காத்திருக்கிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 10 சட்டப்பேரவை தொகுதிகளில், பாளையங்கோட்டையில் திமுக, தென்காசி மற்றும் நாங்குநேரியில் சமத்துவ மக்கள் கட்சி, ராதாபுரத்தில் தேமுதிக, மற்ற தொகுதிகளில் அதிமுக வென்றது. கடையநல்லூர் எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் இருந்த பி.செந்தூர்பாண்டியன் கால மானதை அடுத்து இத்தொகுதியில் எம்எல்ஏ பதவி இடம் காலியாக இருக்கிறது.
அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டு பணம் செலுத்தி விருப்பமனு அளித்திருக்கிறார்கள். அத்துடன் தங்கள் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட வேண்டும் என்றும் விருப்பமனு அளித்திருக்கிறார்கள். ஆனால் தொகுதி மக்கள் மத்தியிலும், கட்சி தலைமையிடத்திலும் இவர்கள் நற்பெயரை பெற்றிருக்கவில்லை என்பதால் அவர்களில் யாருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்றே அக் கட்சி வட்டாரத்திலும், உளவுத்துறை வட்டாரத்திலும் பேசப்படுகிறது.
இதன் காரணாக சிலர் கட்சியிலுள்ள தங்களுக்கு வேண்டியவர்கள், தங்கள் உறவினர்கள், வாரிசுகளுக்கு போட்டியிட வாய்ப்பு கேட்டு மனு கொடுத்துள்ளனர். அம்பா சமுத்திரம் தொகுதியில் இம்முறை அதிமுக சார்பில் பெண் வேட்பாளர் களமிறக்கப்படலாம் என்று கருதி, தற்போதைய எம்எல்ஏ இசக்கிசுப்பையா தனது மனைவிக்கு போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார். திருநெல்வேலி மேயர் புவனேஸ்வரியும் இத்தொகுதிக்கு மனுச் செய்து ள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, புதிய கட்சி தொடங்கியுள்ள நாராயணன், அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருப்பதால், மீண்டும் நாங்குநேரி அல்லது ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு, அது கிடைக்கும் என்று காத்திருக்கிறார்.
புதுமுகங்கள்
அதிமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதை கருத்தில் கொண்டுதான் கடந்த சில வாரங்களாகவே விருப்பமனு கொடுத்த அதிமுக நிர்வாகிகள் சென்னையில் முகாமிட்டு காயை நகர்த்தி வருகிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் அதிமுக சார்பில் புதுமுகமாக கேஆர்பி பிரபாகரன் நிறுத்தப் பட்டதுபோல் இம்முறையும் கட்சிக்காக பாடுபட்ட அடிமட்ட தொண்டர்கள், நிர்வாகிகள் என்று யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
தேமுதிக தரப்பில் வெற்றி பெற்றாலும், கடைசியில் அதிமுகவில் இணைந்த மைக்கேல் ராயப்பனுக்கு மீண்டும் ராதாபுரம் தொகுதி அதிமுகவில் ஒதுக்கப்படுமா என்பது கேள்விக்குறி. ஏற்கெனவே அதிமுகவில் பணியாற்று வோருக்குத்தான் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக இத் தொகுதி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தென்காசி எம்எல்ஏ சரத்குமார், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில், நாகர்கோவில், நாங்குநேரி அல்லது தென்காசியில் போட்டியிட பல்ஸ் பார்த்து வருகிறார். பாளையங்கோட்டை தொகுதியை கைவசம் வைத்துள்ள திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ மைதீன்கான் விருப்பமனு கொடுத்து காத்திருக்கிறார். எனினும், மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல்வகாபுக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக கடந்த சில வாரங்களாகவே அக் கட்சியினர் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT