Published : 04 Nov 2021 03:13 AM
Last Updated : 04 Nov 2021 03:13 AM
ஒரு நாள் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகைக்காக ஆண்டு முழுவதும் உழைக்கும் சுமார் 8 லட்சம் தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்வளித்து வருகிறது சிவகாசி பட்டாசுத் தொழில்.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றி யுள்ள மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்வது பட்டாசுத் தொழில். சிவகாசியைச் சேர்ந்த அய்ய நாடார், சண்முக நாடார் ஆகியோர் முதன்முதலாக சிவகாசியில் பட்டாசு ஆலையைத் தொடங்கினர். வறட்சி, விவசாயமின்மை போன்ற காரணங்களால் அனைத்துத் தரப்பினரும் உற்பத்தித் தொழிலில் ஈடுபடுவதால் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் அதிகம் தோன்றின.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. பட்டாசு ஆலைகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், பட்டாசு தொழிற்சாலைகளின் உபதொழிலாகச் செயல்படும் காகித ஆலைகள், அச்சுத் தொழில் சார்ந்தோர், வாகன போக்குவரத்து, சுமைப் பணி தொழிலாளர்கள், வெடிபொருள் மருந்து மற்றும் ரசாயன உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் என சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
நம் நாட்டின் ஒட்டு மொத்த பட்டாசு தேவையில் 95 சதவிகித தேவையை சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகள் பூர்த்தி செய்கின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.6 ஆயிரம் கோடி வரை பட்டாசு விற்பனை நடைபெறுகிறது. ஆனாலும் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, நீதிமன்றம் விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள், டில்லி உள்ளிட்ட மாநிலங்கள், பல்வேறு நகரங்களில் பட்டாசு வெடிக்கத் தடை உள்ளிட்ட காரணங்களால் கடந்த 5 ஆண்டுகளாக சிவகாசி பட்டாசுத் தொழில் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் பட்டாசுத் தொழில் மட்டுமின்றி அத்தொழிலை நம்பி வாழ்க்கை நடத்தி வரும் சுமார் 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, பட்டாசு ஆலை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் கூறுகையில், விநாயகர் சதுர்த்தி, தசரா பண்டிகை களுக்காக வட மாநிலங்களிலிருந்து ஆர்டர்கள் குவியும். ஆனால், வடமாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்ட தாலும், பசுமைப் பட்டாசுகள் மட்டுமே வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாலும் இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டது. அதோடு, சரவெடி வெடிக்கவும் உச்ச நீதிமன்றம் தடைவிதித் துள்ளதால் பட்டாசுப் பிரியர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். ஆனாலும், பொதுமக்கள் பசுமைப் பட்டாசுகளை பாதுகாப்பாக வெடித்து தீபாவளியை கொண்டாடு வதுடன், பட்டாசுத் தொழிலுக்கு ஆதரவளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT