Published : 03 Nov 2021 06:20 PM
Last Updated : 03 Nov 2021 06:20 PM
அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தீக்காய விபத்துக்கான சிறப்பு சிகிச்சை வார்டுகள் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (03-11-2021) கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீபாவளி தீக்காய சிறப்பு சிகிச்சைப் பிரிவு வார்டைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''பட்டாசுகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், மருத்துவத்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை ஆகிய துறைகளின் சார்பில் பல இடங்களில் பட்டாசுகளைக் கையாளுவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
பட்டாசுகளை வெடிக்கும்பொழுது மிகவும் விழிப்புணர்வோடு கையாள வேண்டும். நீதிமன்றம் அனுமதித்த காலகட்டத்திற்குள் பட்டாசுகளைப் பயன்படுத்த வேண்டும். அதையும் மீறி விபத்துகள் ஏற்பட்டால் அவற்றிற்கு சிகிச்சை அளிப்பதற்குத் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தீக்காய விபத்துக்கான சிறப்பு சிகிச்சை வார்டுகள் திறக்கப்பட்டுள்ளன.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீக்காய விபத்துகளுக்கான சிகிச்சைப் பிரிவு வார்டுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இரண்டாவது தளத்தில் 12 வார்டுகளும், தரைத்தளத்தில் 10 வார்டுகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் 2018-ல் 123 பேர், 2019-ல் 242 பேர், 2020-ல் 154 பேர் பட்டாசு விபத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த ஆண்டு எந்த விபத்தும் வரக்கூடாது எனக் கருதுகிறோம். தீக்காய சிகிச்சைப் பிரிவில் 2-வது தளத்தில் 12 பிரத்யேக படுக்கை கொண்ட வார்டு தயாராக உள்ளது. அதிதீவிர சிகிச்சைக்குத் தரைத்தளத்தில் 10 படுக்கைகள் என மொத்தம் 22 படுக்கைகள் தயாராக உள்ளன''.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT