Published : 03 Nov 2021 03:57 PM
Last Updated : 03 Nov 2021 03:57 PM

இந்தியாவிலேயே முதல் முறை: தமிழகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சர்வதேச தரச்சான்று

சென்னை

தமிழ்நாடு காவல்துறையின் மாநிலக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வழங்கப்பட்ட ISO 27001:2013 சர்வதேச தரச்சான்றைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காவல்துறை தலைமை இயக்குநருக்கு வழங்கினார்.

இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (3.11.2021) தலைமைச் செயலகத்தில், சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மாநிலக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு British Standards Institution வழங்கிய ISO 27001:2013 சர்வதேச தரச்சான்றைக் காவல்துறை தலைமை இயக்குநர் செ.சைலேந்திர பாபுவிடம் வழங்கினார்.

சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மாநிலக் காவல் கட்டுப்பாட்டு அறையில், அவசர கால உதவி எண்கள் 100, 112 மற்றும் 101 அழைப்புகள் கையாளப்படுகின்றன. இது நவீன ஒருங்கிணைந்த தரவுத் தளம் மற்றும் இதர தொழில்நுட்பக் கட்டமைப்புகளுடன் நிறுவப்பட்டுள்ளது. இந்த நவீன ஒருங்கிணைந்த தரவுத் தளத்தில் இதுநாள் வரையில் 1.12 கோடி அவசர கால அழைப்பு விவரங்கள் மற்றும் 14.5 லட்சம் ‘காவலன்’ செயலி பயன்படுத்துவோரின் தகவல்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த நவீன ஒருங்கிணைந்த தரவுத் தளத்தின் தகவல்கள் பாதுகாப்பு அமைப்பிற்கு British Standards Institution-னால் ISO 27001:2013 சர்வதேச தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. இச்சான்றானது, இந்தியாவிலேயே முதல் முறையாகத் தமிழ்நாடு காவல்துறையின் மாநிலக் காவல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாட்டிற்குப் பெறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில், உள்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவல்துறை கூடுதல் இயக்குநர் (சைபர் கிரைம்) அமரேஷ் புஜாரி, காவல்துறை கூடுதல் இயக்குநர் (தொழில்நுட்ப சேவை) வினித் தேவ் வான்கடே, காவல்துறை துணைத் தலைவர் (தொழில்நுட்ப சேவை) எஸ்.மல்லிகா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்''.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x