Published : 03 Nov 2021 01:47 PM
Last Updated : 03 Nov 2021 01:47 PM

மாணவர்களை பலிபீடமாக்கும் நீட்; ரத்து செய்யாவிடில் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும்: கி.வீரமணி எச்சரிக்கை

சென்னை

மருத்துவப் படிப்பைப் பற்றி குடியரசு துணைத் தலைவரின் கருத்துகள் இன்றைய சூழலில் மிக முக்கியமானவை. மாணவர்களை பலிபீடமாக்கும் நீட் தேர்வை ரத்து செய்யாவிடில் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

''குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு விஜயவாடாவிலுள்ள மருத்துவக் கல்லூரியில் புதிய பிரிவுகள் மற்றும் அதிநவீன சாதனங்களை திங்கள்கிழமை (1.11.2021) தொடங்கி வைத்துப் பேசியபோது குறிப்பிட்டுள்ள சில கருத்துகள் இன்றைய சூழலில் மிகவும் முக்கியமானவை ஆகும்.

குடியரசு துணைத் தலைவரின் கருத்துகள்

’’1. மருத்துவத் தொழிலில் மனிதவளப் பற்றாக்குறைப் பிரச்சினைகளுக்கு அவசரத் தீர்வு காணப்படவேண்டும்.
2. நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட வேண்டியதன் தேவையை கரோனா பெருந்தொற்று உணர்த்தியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி 1000 பேருக்கு (2024-க்குள்) ஒருவர் என்ற விகிதத்தை அடைய வேண்டும். அந்தத் திசையில் இந்தியா சென்று கொண்டிருக்கவேண்டும்.
3. கடந்த சில ஆண்டுகளாக மருத்துவத் தொழில் வணிகமயமாவது அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.
4. கிராமப்புறங்களில், தொலை மருத்துவ சேவை வழங்குவது உள்ளிட்ட பல துறைகளில், அரசு - தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க வேண்டும்’’.

இவ்வாறு குடியரசு துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் பாதிப்பு யாருக்கு?

நீட் தேர்வின் மூலம் பரவலாக கிராமப்புற, ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல மாநிலங்களிலிருந்து வந்து படிப்பவர்களும், படிப்பை முடித்தபிறகு சொந்த மாநிலம் சென்று விடுவர்; அல்லது அம்மாநிலங்களிலேயே பணி செய்யும்போது, மொழி தெரியாது சிகிச்சை அளிக்கும் இக்கட்டான நிலை முதலிய இடர்ப்பாடுகள் ஏற்படும்.

தற்போதுள்ள நீட் தேர்வு கார்ப்பரேட் வணிகக் கொள்ளைக்கு தாராளமாகக் கதவு திறந்து விட்டுள்ளது. நம் நாட்டு மருத்துவ சேவையின் தேவை இவ்வளவு அதிகமாக இருக்கும்போது, வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு - அதிக பணத்தை சம்பளமாகப் பெற்று, அதற்கு மருத்துவ இடங்களைத் தாரை வார்ப்பது எவ்வகையில் நியாயம்?

முதன்முதலில் நீட் தேர்வு ஆணையம் வரைவு வெளியிட்டபோதே, அது WTO-GATS என்ற பன்னாட்டு ஒப்பந்தத்தின்படிதானே உருவாக்கப்பட்டது. இது வணிக முறையின் வெளிப்பாடும், தொடக்கமும் இல்லையா?

அதுமட்டுமல்ல, கார்ப்பரேட் கோச்சிங் கொள்ளை ஒருபுறம் இருந்தாலும், தனியார் மருத்துவக் கல்லூரியில் சில இடங்களை அதிக கல்விக் கட்டணம் வாங்க அனுமதித்துள்ளது. முன்பு கணக்கில் வராது நன்கொடை வாங்கியோர் - இப்போது சட்டபூர்வமாகவே NRI சீட் விற்பனை மூலம் கல்விக் கட்டணத்தைப் பெற முடிகிறது.

நீட் தேர்வில் குளறுபடிகளும் - ஊழல்களும்!

இன்று வெளிநாட்டிற்குச் சென்று டாக்டர்களாகப் பணி செய்வோர், மேலும் சிறந்த டாக்டர்களாகி மருத்துவப் புகழ் பெற்றவர்களாக இருக்கிறார்களே, அவர்கள் எல்லாம் நீட் தேர்வு எழுதியவர்களா?

கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்துவரும் நீட் தேர்வுகளில் ஒரு ஆண்டிலாவது குளறுபடிகளும், ஊழல்களும், ஆள்மாறாட்டங்களும் இல்லாமல் நடந்தது உண்டா?

உயர் நீதிமன்றங்கள் முதல் உச்ச நீதிமன்றம் வரை கண்டனங்களுக்கும், கடும் விமர்சனங்களுக்கும் ஆளாகவில்லையா? மறுக்க முடியுமா?

மக்கள் கிளர்ச்சி வெடிக்கும்

எனவே, தேவையற்ற கூடுதல் சுமையாகி, இதுவரை 18க்கும் மேற்பட்ட மாணவர்களின் உயிரைக் கொன்ற பலிபீடமான இந்த உயிர்க் கொல்லி நீட் தேர்வை ரத்து செய்ய - வறட்டுக் கவுரவம் - வீண் பிடிவாதத்தைவிட்டு, சமூக நீதியைக் காப்பாற்ற, அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு முரணான - ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் நலனுக்கு எதிரான இந்த நீட் தேர்வை ஒழிப்பதே சாலச் சிறந்தது. ஒட்டுமொத்த மக்களும் கிளர்ந்து எழும் நாள் விரைந்து கொண்டிருக்கிறது’’.

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x