Published : 03 Nov 2021 01:22 PM
Last Updated : 03 Nov 2021 01:22 PM
லடாக்குக்கு சரக்கு ஏற்றிச் சென்ற கோவை, சேலம் ஓட்டுநர்கள் பனிப்பொழிவால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி உணவுக்குத் தவித்தனர். புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை முயற்சியால் அவர்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ராஜ்நிவாஸ் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் கோவை, சேலம் பகுதியைச் சேர்ந்த சரக்கு வாகன ஓட்டுநர்கள் கேரள மாநிலம் காசர்கோடு பகுதியிலிருந்து ஜம்மு -காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதிக்கு சரக்குகளை ஏற்றிச் சென்றனர். அப்போது ஜம்முவிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் கடும் பனிப்பொழிவின் காரணமாகப் போக்குவரத்து நெரிசலில் சிக்கினர். அப்போது தாங்கள் கொண்டுசென்ற உணவுப் பொருள்கள் தீர்ந்து விட்டதுடன், குளிர் அதிகமாக உள்ளது, தங்களுக்கு உதவி வேண்டும் என்று காணொளி வெளியிட்டனர்.
இதைப் பார்த்த கோயம்புத்தூர் மாவட்ட சமூகச் செயற்பாட்டாளர்கள் நேற்று இரவு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
இதையடுத்து துணைநிலை ஆளுநர் தமிழிசை, ராணுவ மேஜர் துசார் பஜிரைத் தொடர்புகொண்டு வாகன ஓட்டுநர்களுக்கு உடனடியாக உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து அவர் ஜம்மு- காஷ்மீர் மாநில ஆளுநர் சின்கா அலுவலகத்தில் உள்ள ராணுவ மேஜரைத் தொடர்புகொண்டு வாகன ஓட்டுநர்களுக்கு வேண்டிய உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரினார்.
அவர்கள் தந்த தகவலின் படி ஹரிபுரா என்ற பகுதியில் நின்று கொண்டிருக்கும் வாகன ஓட்டுநர்களுக்கு உதவி செய்ய அந்தப் பகுதியில் உள்ள சிஆர்பிஎஃப் வீரர்களுக்குத் தகவல் அனுப்பப்பட்டது. சிஆர்பிஎஃப் வீரர்களும் வாகன ஓட்டுநர்களைக் கண்டறிந்து அவர்களைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்று முகாம்களில் தங்கவைத்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துள்னனர். தற்போது அவர்கள் நலமுடன் உள்ளதாக ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT