Published : 03 Nov 2021 11:23 AM
Last Updated : 03 Nov 2021 11:23 AM
அறியாமை எனும் இருளைப் போக்கி வெற்றியையும் வளர்ச்சியையும் இந்த தீபாவளித் திருநாள் கொண்டுவரட்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கே.எஸ்.அழகிரி இன்று ( நவ. 2) வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “ஒரு மதத்தினர் பண்டிகைகளைக் கொண்டாடும்போது மற்ற மதத்தினர் வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்வது நமது நாட்டின் கலாச்சாரமாகத் தொடர்ந்து வருகிறது. அத்தகைய அடிப்படைப் பண்புகளைக் கொண்ட பண்டிகைகளில் தீபாவளிக்கு முக்கிய இடம் உண்டு.
கடந்த 19 மாதங்களாக கரோனாவின் கோரப்பிடியில் சிக்கி வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த மக்களுக்கு இந்த தீபாவளித் திருநாள் ஒளி காட்டும் வகையில் அமைய வேண்டும் என்பதே நம் விருப்பம். இந்திய மக்கள் அனைவருடைய வாழ்விலும் ஏற்றம் உண்டாக வேண்டும். நாட்டில் அதர்மம் அழிந்து, தர்மம் நிலைக்க இந்த தீபாவளித் திருநாள் பாதை அமைத்துக் கொடுக்கட்டும். ஆனந்தமும் அமைதியும் பெருக இந்த தீபாவளிக் கொண்டாட்டம் அடித்தளமாக அமைய வேண்டும்.
தீமை மறைந்து நன்மை பெருகும் என்ற நம்பிக்கையோடுதான் ஏழை, எளிய மக்கள் தீபாவளி கொண்டாடுகிறார்கள். அவர்களின் நம்பிக்கை பொய்த்துப் போகாமல், நாட்டைச் சூழ்ந்துள்ள தீமைகளை நாம் ஒன்றுசேர்ந்து வெல்வோம் என இந்த நன்னாளில் சபதம் ஏற்போம்.
அறியாமை எனும் இருளைப் போக்கி வெற்றியையும் வளர்ச்சியையும் இந்த தீபாவளித் திருநாள் கொண்டுவரட்டும். அனைவரும் நேர்மறை சிந்தனையுடன் பணியாற்றும் வாய்ப்பை இந்த நன்னாள் வழங்கட்டும்.
கடந்த ஓராண்டிற்கும் மேலாக கரோனா, பொருளாதாரச் சீரழிவு, வேலையிழப்பு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு எனப் பல அவதாரங்களை எடுத்து மக்களை வதைத்துக் கொண்டிருக்கும் நவீன நரகாசுரனுக்கும் முடிவு கட்டும் நன்னாளாக இந்த தீபாவளி அமையட்டும்.
தீப ஒளியில் ஏழைகளின் இன்முகம் ஒளிரட்டும். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT