Published : 03 Nov 2021 03:07 AM
Last Updated : 03 Nov 2021 03:07 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.சின்னக்கண்ணு கண் பார்வையில்லாத ஆதரவற்றவர். 70 வயது மதிக்கத்தக்க அவர், சாலையில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.
இவ்வாறு சிறிது சிறிதாக சேர்த்த பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் வைத்த இடத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு மறந்துவிட்டார். அந்தப் பணம் இப்போது அவருக்கு கிடைத்துள்ளது. ஆனால் இந்த ரூபாய் நோட்டுகள் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டுவிட்டதால் இப்போது செல்லாது என அவரிடம் கூறியுள்ளனர்.
இதனால் வேதனை அடைந்த அவருக்கு அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆறுதல் கூறி, கடந்த அக்டோபர் 18-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இது தொடர்பாக ஒரு மனுவை சமர்ப்பித்துள்ளனர். இந்த மனுவை மாவட்ட நிர்வாகம் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி உள்ளது.
‘தி இந்து’வில் வெளியான இது தொடர்பான செய்தியைப் படித்த, சென்னையைச் சேர்ந்த வாசகர், தி இந்து அலுவலகத்துக்கு சென்று அந்த நபருக்கு உதவ விருப்பம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி.ஜெயச்சந்திர பானு ரெட்டியை தொடர்புகொண்ட ‘தி இந்து’ நிர்வாகம் இந்த தகவலை தெரிவித்தது. பின்னர், சின்னக்கண்ணு வைத்திருந்த ரூ.65 ஆயிரம் பழைய ரூபாய் நோட்டுக்கு ஈடான தொகையை மாவட்ட ஆட்சியரின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்தார் அந்த வாசகர்.
இதுகுறித்து அந்த வாசகர் கூறும்போது, “பல ஆண்டுகளாக சிறிதுசிறிதாக சேர்த்துவைத்த பணத்துக்கு மதிப்பில்லாமல் போனதற்கு அவர் காரணமல்ல. எனவே, அவருக்கு அந்தப் பணத்தை கொடுக்க முன்வந்தேன். இது தொடர்பான செய்தியில் என்னுடைய பெயரை வெளியிட வேண்டாம்” என்றார்.
பின்னர் சின்னக்கண்ணுவை அழைத்து ரூ.65 ஆயிரத்துக்கான காசோலையை மாவட்ட நிர்வாகம் வழங்கியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT