Published : 03 Nov 2021 03:08 AM
Last Updated : 03 Nov 2021 03:08 AM
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் கந்தசஷ்டி திருவிழா நாளை (4-ம் தேதி) யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. நாளை அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது. காலை 7.35 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது.
காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 12 மணிக்கு யாகசாலையில் சுவாமிக்கு தீபாராதனை நடைபெறுகிறது. யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர் வீரவாள் வகுப்பு, வேல்வகுப்பு பாடல்களுடன் சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருள்கிறார். பிற்பகல் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு சஷ்டி விரத மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக தங்கத்தேர் உலா ரத்து செய்யப்பட்டு உள்ளது.
2-ம் நாள் திருவிழா முதல் 5-ம் நாள் திருவிழா வரை அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, வழக்கமான பூஜைகள் நடைபெறும்.
வரும் 10-ம் தேதி திருக்கல்யாணம்
6-ம் நாள் திருவிழாவான வரும் 9-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. அன்று மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருள்கிறார். பின்னர், கோயில் வளாகத்தில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. நவம்பர் 10-ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
எப்போது தரிசிக்கலாம்?
ஒன்றாம் நாள் திருவிழா முதல் 5-ம் நாள் திருவிழா வரை, அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டும் தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். இதில் 5 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்களும், 5 ஆயிரம் பேர் நேரடியாக வரும் பக்தர்களும் அனுமதிக்கப்படுவர். முக்கிய விழாக்களான சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் நிகழ்வுகளில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி கிடையாது.
ஏற்பாடுகளை கோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொ) குமரதுரை ஆகியோர் செய்து வருகின்றனர். கந்தசஷ்டி சூரசம்ஹாரம் நடைபெறும் நவம்பர் 9-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT