Published : 11 Mar 2016 05:52 PM
Last Updated : 11 Mar 2016 05:52 PM
அரசியல் கட்சிகளுக்கு வர வேண்டிய பணம், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே வந்துவிட்ட நிலையில், அதனை வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய மட்டுமே நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் மாவட்ட அளவிலான நிர்வாகிகள்.
தமிழக சட்டப்பேரவை தேர்த லுக்கு, இன்னும் இரு மாதங் களுக்கு மேல் உள்ள நிலையில், தொகுதிகளைப் பிடிக்க இரு திராவிடக் கட்சிகளும் கடுமையாக போட்டியிட்டு வருகின்றன.
கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்த வரை இங்குள்ள 6 தொகுதிகளில், இரண்டு தொகுதிகளை வெல்வதே திராவிடக் கட்சிகளுக்கு பெரும் பாடு. இந்த முடிவை இம்முறை மாற்றிக் காட்டவேண்டும் என்ற முனைப்பில் திராவிட கட்சிகள் களம் இறங்கியுள்ளன. இதற்காக வாக்காளர்களை கவரும் உத்திகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சி செலவுக்கான பணம் மட்டுமே கைமாறிய நிலையில், வாக்காளர்களுக்கு விநியோகிக்கத் தேவையான பணம் கிடைக்காமல் போனது. ஆனால் கடந்த 2014 மக்களவைத் தேர்தலில், பறக்கும்படை, தேர்தல் அதிகாரிகளின் கண்காணிப்பு ஆகியவற்றைத் தாண்டி, கன்னி யாகுமரி மாவட்டத்தில் கோடிகள் பல புரண்டு, வாக்குக்கு விலைபேசப்பட்டது.
இதையே தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் திட்டமிட்டு அரங்கேற்ற உள்ளனர். தேர்தலுக்கான காலம் இன்னும் 2 மாதங்கள் வரை இருப்பதால், தொகுதிக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு தலா ரூ. 1,000 வீதம் விநியோகம் செய்ய கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக, தேர்தல் அறிவிப்புக்கு 20 நாட்கள் முன்பே மாவட்டச் செயலாளர்களுக்கு, அந்தந்த கட்சிகளின் தலைமை யிடம் இருந்து பல கோடி ரூபாய் வந்துவிட்டது. தேர்தல் கூட்டணி முடிவு தெரிந்து, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதும் முதல்கட்ட பட்டு வாடாவை தொடங்க கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
தீவிர ஆய்வு
மாவட்டத்தில் சராசரியாக தொகுதிக்கு 2 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் பிற கட்சி வாக்காளர்கள் மற்றும் வாக்குக்கு பணம் கொடுத்தாலும் மாறாதவர்களைத் தவிர, கட்சி வாக்குகள் மற்றும் கிராமங் களில் வறுமை நிலையில் வாடு வோர், குடிபோதைக்கு அடிமை யானவர்கள், பணம் கொடுத்தால் எதையும் செய்யும் மனநிலை கொண்டவர்களை கண்டுபிடிக்கும் வகையில் ஒவ்வொரு ஒன்றியம், கிராமம் வாரியாக கணக்கெடுப்பு நடை பெறுகிறது.
தொகுதிக்கு குறைந்தது ஒன்றரை லட்சத்துக்கு மேற்பட் டவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் பணம் பட்டுவாடா செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு பணம் பெற்றவர்களில் 80 ஆயிரம் பேர் வாக்களித்தாலேயே வெற்றி உறுதியாகி விடும் என்பதுதான் கட்சிகளின் கணக்கு.
இதுகுறித்து பறக்கும்படை வட்டாரத்தில் கேட்டபோது, `இது குறித்து எங்களுக்கும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. வாகன சோதனை மற்றும் பிற கண்காணிப்பில் கவனம் செலுத் தினாலும் பட்டுவாடா செய்வ தற்காக கட்சியினர் பணம் பதுக்கி வைத்திருக்கும் இடம் குறித்து உறுதியாக அறிந்தால் உடனடி நடவடிக்கையில் இறங்குவோம்’ என்றனர்.
மகளிர் குழுவின் திடீர் கூட்டம்
தேர்தலுக்கான முதல்கட்ட பட்டுவாடாவை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கொடுப்பதற்கு கட்சிகள் முடிவெடுத்துள்ளன. இதற்காக, இரு நாட்களுக்கு முன் மாலை நேரத்தில், குலசேகரம் அரசுமூடு சந்திப்பு அருகே உள்ள மண்டபத்தில், மகளிர் சுய உதவிக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான பெண்கள் அங்கு கூடினர். மகளிர் குழுக்களின் வாக்குகளை பெறுவதற்காக பணம் கொடுப்பதாக அப்பகுதியில் தகவல் பரவியது. தகவல் அறிந்த பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்தோர், தேர்தல் அதிகாரிகளிடம் செல்பேசி மூலம் புகார் அளித்தனர்.
பத்மநாபபுரம் தேர்தல் நடத்தும் அலுவலரான சார் ஆட்சியர் ஸ்ரேயா சிங் மற்றும் அலுவலர்கள் அங்கு விரைந்தனர். விசாரித்தபோது, கூட்டம் நடத்துவதற்கான அனுமதி பெறவில்லை என்பது தெரியவந்தது. பணம் பட்டுவாடா குறித்து சோதனை நடத்தியதில் பணம் ஏதும் சிக்கவில்லை. அதேநேரம் அனுமதியின்றி திடீரென நடத்திய மகளிர் சுயஉதவி குழு கூட்டத்தை சார் ஆட்சியர் ஸ்ரேயா சிங் ரத்து செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT