Published : 02 Nov 2021 05:15 PM
Last Updated : 02 Nov 2021 05:15 PM
கோவை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து வருவதால், சுகாதாரத்துறை சார்பில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வட்டாரந்தோறும் சிறப்பு மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
''வழக்கமாகக் கோடைக் காலத்தைவிட மழை மற்றும் குளிர்காலத்தில் அதிக அளவில் தொற்று நோய், உடல் உபாதைகள் ஏற்படும் என்பதால் நோய்த் தொற்றைத் தடுக்க வேண்டிய பணிகளில் சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது. வட்டாரந்தோறும் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவக் குழுவில் 2 மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், ஒரு சுகாதார செவிலியர் இடம்பெறுவர். நீர் மற்றும் பூச்சிகளால் பரவும் வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் வராமல் தடுக்க அனைத்துத் தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
அதற்கேற்ப பொதுமக்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீரை மட்டும் பயன்படுத்த வேண்டும். கொதிக்க வைத்துக் குடிநீரை அருந்த வேண்டும். தொற்றுநோய் வராமல் தடுக்க, மலம் கழித்த பின்பும், சாப்பிடுவதற்கு முன்பும், வெளியில் சென்றுவந்த பிறகும் கைகளைச் சோப்பு போட்டு நீரால் கழுவ வேண்டும். மழைநீரில் நனைந்த உணவுப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. குப்பை மற்றும் அழுகிய பொருட்களில் ஈக்கள் உற்பத்தியாகின்றன.
எனவே, குப்பை, அழுகிய பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும். இந்த இடங்களை பிளீச்சிங் பவுடர் மற்றும் சுண்ணாம்பு ஆகியவற்றைக் கொண்டு கிருமி நீக்கம் செய்யவேண்டும். டயர்கள், உடைந்த மண்பாண்டங்கள், தேங்காய்ச் சிரட்டைகள், பெயிண்ட் டப்பாக்கள், தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கட்டுமான இடங்களில் தேங்கும் தண்ணீர் போன்றவற்றில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாக வாய்ப்புள்ளது. எனவே, மழைநீர் தேங்கும் வகையில் உள்ள தேவையற்ற பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளால் மழைக்காலங்களில் நோய் ஏற்படாமல் தடுக்க முடியும்.
மழைக் காலங்களில் விஷப்பூச்சிகள் வீட்டில் நுழைய வாய்ப்புள்ளதால், வீடுகளின் அருகாமையில் உள்ள புதர்களை அகற்ற வேண்டும். தேவையான அளவு பிளீச்சிங் பவுடர், கொசு ஒழிப்பு மருந்துகள், ஓஆர்எஸ் பவுடர் மற்றும் பாம்புக்கடி மருந்துகள் மற்றும் பிற உபரணங்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான அளவு இருப்பு உள்ளது. மேலும், அவசர உதவி மற்றும் ஆலோசனைகளுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை எண் 1077-ஐத் தொடர்புகொள்ளலாம்.
யாருக்கேனும் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், அவர்கள் உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்’’.
இவ்வாறு சுகாதாரத் துறை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT