Published : 02 Nov 2021 12:51 PM
Last Updated : 02 Nov 2021 12:51 PM
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் அனைவருக்கும் ஒரே நேரத்தில் ஊதியம் கிடைப்பதற்கான நடவடிக்கையைத் தமிழ்நாடு முதல்வர் எடுத்து, அனைத்துப் பிரிவினரிடமும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
''ஊரகப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும், கிராமப்புற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையிலும், கிராமப்புற மக்களின் வேலைக்கான உத்தரவாதத்தை நிலைநாட்டும் வகையிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஏழை எளிய மக்களுக்கான ஊதியம் ஒரு சில பிரிவினருக்கு, தாமதமாகத் தரப்படுவதன் காரணமாக கிராமப்புற மக்களிடையே பதற்றம் நிலவுவதாகச் செய்திகள் வருகின்றன.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ஒரே பணியாளர் வருகைப் பதிவேட்டின் கீழ், ஒரே இடத்தில், ஒன்றாக, குறிப்பிட்ட நாட்களுக்குப் பணியாற்றியவர்களுக்கான ஊதியம் ஒருசில பிரிவினருக்கு 15 முதல் 20 நாட்களுக்குள் அளிக்கப்பட்டு விடுவதாகவும், ஒருசில பிரிவினருக்கு இரண்டு மாதங்கள் ஆகின்றன என்றும், இதன் காரணமாகப் பணியாளர்களிடையே சந்தேகமும், கசப்புணர்வும் ஏற்படுவதாகவும், இதுகுறித்து ஊராட்சி அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், அனைவருக்குமான ஊதியம் ஒன்றாகத்தான் சமர்ப்பிக்கப்படுகிறது என்றும், ஆனால் அதற்கான ஊதியம் பிரித்து அனுப்பப்படுவதாகவும், இந்தப் பிரச்சினை ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், பிஹார், கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் நிலவுவதாகவும் பத்திரிகையில் செய்திகள் வந்துள்ளன.
இதுகுறித்துத் தமிழ்நாட்டின் ஊரக வளர்ச்சித் துறை மூத்த அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரிந்ததற்கான ஊதியம் மற்ற பிரிவினரைக் காட்டிலும் ஜூன் மாதத்தில் தாமதமாகக் கிடைத்ததாக ஏராளமான புகார்கள் வந்திருப்பதாகக் கூறியுள்ளார் எனப் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. இது மிகவும் வருத்தம் அளிக்கும் செயல் ஆகும். இந்த நிலை நீடித்தால், இதனால் ஏற்படும் பின்விளைவுகள் கடுமையாக இருப்பதோடு, சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதாக அமைந்துவிடும்.
ஒரே இடத்தில் ஒன்றாகப் பணி புரிந்தவர்களுக்கான ஊதியத்தை ஒரே சமயத்தில் வழங்குவதுதான் இயற்கை நியதி, இந்த இயற்கை நியதியைப் பின்பற்றி ஊதியம் வழங்கப்படும்போது, பணிபுரிபவர்களிடையே ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும், சகோதரத்துவமும் ஏற்படுவதோடு, பணியாளர்கள் மகிழ்ச்சியுடன் மேலும் சிறப்பாகப் பணியாற்றவும் வழிவகுக்கும். மாறாக, ஊதியத்தை ஒரு பிரிவினருக்கு முன்னதாகவும், மற்றொரு பிரிவினருக்குத் தாமதமாகவும் அளித்தால் பணிபுரிபவர்களிடையே மனக்கசப்பை உண்டாக்குவதோடு, தாமதமாக ஊதியம் பெறுபவர்களின் பணிபுரியும் ஆர்வமும் குறைந்துவிடும்.
இந்தியாவில் உள்ள பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த மக்களுக்குச் சரியாக எவ்வளவு நிதியுதவி அளிக்கப்படுகிறது என்பதைக் கண்டறியும் பொருட்டு மத்திய அரசு புதிய முறையை நடப்பாண்டு முதல் செயல்படுத்தியுள்ளதுதான் இதற்குக் காரணம் என்றாலும், இதில் உள்ள சாதக, பாதகங்களை மத்திய அரசிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசிற்கு உண்டு.
நேற்றுகூட தமிழ்நாடு முதல்வர், இத்திட்டத்தின் கீழ் நிலுவையாக உள்ள 1,178 கோடி ரூபாயை விடுவிக்குமாறு பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். ஆனால், மத்திய அரசு தற்போது பின்பற்றி வரும் நடைமுறையில் உள்ள சாதக, பாதகங்களைப் பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை.
எனவே, தமிழ்நாடு முதல்வர் இதில் உடனடியாக கவனம் செலுத்தி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் அனைவருக்கும் ஒரே நேரத்தில் ஊதியம் கிடைப்பதற்கான நடவடிக்கையை எடுத்து, அனைத்துப் பிரிவினரிடமும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்''.
இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT