Published : 02 Nov 2021 03:09 AM
Last Updated : 02 Nov 2021 03:09 AM
்தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பெரியாறு அணையில் கேரளா ஆளுமை செலுத்துவதைக் கண்டித்து குமுளி அருகே லோயர்கேம்ப்பில் 5 மாவட்ட விவசாயிகள் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியாறு அணையில் உச்ச நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட 142 அடிக்கு நீர்மட்டத்தை உயர்த்த விடாமல், கடந்த 29-ம் தேதி கேரளாவுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. நீர் திறப்பு உரிமை தமிழகத்திடம் உள்ள நிலையில், கேரள நீர்வளத் துறை அமைச்சர் ரோஷிஅகஸ்டின், விவசாயத் துறை அமைச்சர் பிரசாத் ஆகியோர் நீரை திறந்துவிட்டது தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், அணையிலே முகாமிட்டு கேரளப் பகுதிக்கு வெளியேறும் நீரின் அளவையும் அதிகரித்து வருகின்றனர். இங்கிருந்து செல்லும் நீர் கேரளாவில் உள்ள இடுக்கி அணையில் தேக்கி வைத்து மின்சார உற்பத்திக்குப் பிறகு அரபிக் கடலில் கலக்கிறது. இதனால் பலத்த மழை பெய்தும் பெரியாறு அணையில் இந்த ஆண்டும் 142 அடிக்கு நீரை தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தேனி மாவட்டத்தை அடுத்துள்ள கேரள எல்லையான குமுளியில் ஆர்ப்பாட்டம் நடத்த 5 மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் நேற்று காலை சென்றனர். இவர்களை லோயர்கேம்ப் என்னும் இடத்தில் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் அந்த இடத்திலேயே விவசாயிகள் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு 5 மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ்.ராஜசேகர் தலைமை வகித்தார். பொருளாளர் லோகநாதன், துணைத் தலைவர்கள் ராஜீவ் காந்தி, ராதா கணேஷ், ரஞ்சித்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கோரிக்கையை விளக்கிப் பேசியதாவது:
தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பெரியாறு அணையில் கேரள அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அத்துமீறி முகாமிட்டுள்ளனர். இவர்களை வெளியேற்ற வேண்டும். பெரியாறு அணை குறித்த தவறான தகவல்களை தெரிவிக்கக் கூடாது. அணையின் பாதுகாப்பு, கட்டுப்பாடு, உரிமை அனைத்தும் தேனி மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் வரவேண்டும். இவரின் அனுமதி பெற்றே அணைக்குள் செல்லும் நிலையை உருவாக்க வேண்டும்.
பெரியாறு அணையைக் கண்காணிக்க, விவசாயப் பிரதிநிதிகள் உள்ளடங்கிய ஆய்வுக் கமிட்டியை ஏற்படுத்த வேண்டும். கேரளாவின் அத்துமீறல்கள் தொடர்பான முழுமையான அறிக்கையை தேனி மாவட்ட நிர்வாகம் தமிழக அரசுக்கு அறிக்கையாக அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பொதுச்செயலாளர் பொன்காட்சிக்கண்ணன், சலேத்து, தேசிய விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சீனிராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விவசாயிகளிடம் உத்தமபாளையம் வட்டாட்சியர் அர்ஜுனன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஷிரேயாகுப்தா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆர்ப்பாட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தேனி ஆட்சியரிடம் மனு கொடுக்க விவசாயிகள் சென்றனர். ஆட்சியர் அலுவலகத்தில் 5 மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ்.ராஜசேகர் கூறியதாவது:
தற்போது முதல்கட்ட எதிர்ப்பை தெரிவித்துள்ளோம். அணையில் தமிழக அரசுக்குச் சொந்தமான படகை இயக்க முடியவில்லை. அணை பாதுகாப்பில் கேரள போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இதனால் அணையில் பணியில் இருக்கும் தமிழக பொறியாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. எனவே தமிழக போலீஸாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். மீன்பிடிப்பது உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை இழந்துவிட்டோம். அணை மீதான கட்டுப்பாடு, நீர் திறப்பு உரிமைகளையும் கேரளா தட்டிப் பறிக்கிறது.
தமிழகத்தின் உரிமையை மீட்டெடுக்கும் முயற்சி தொடரும். கேரளா தனது போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் வரும் 12-ம் தேதி தேனியில் இருந்து பெரியாறு அணைக்கு நீதி கேட்டு நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறோம். இதில் 5 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்பர் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT