Published : 08 Jun 2014 09:50 AM
Last Updated : 08 Jun 2014 09:50 AM

2ஜி வழக்கால்தான் காங்கிரஸுக்கு கெட்ட பெயர்: நிர்வாகிகள் கூட்டத்தில் ஞானதேசிகன் பரபரப்பு பேச்சு

2ஜி வழக்கில், காங்கிரஸுக்கு எதுவும் தொடர்பில்லை என்ற உண்மையை தேர்தலுக்கு முன்பு மக்களிடம் விளக்கியிருந்தால், இந்தத் தோல்வி வந்திருக்காது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் சனிக்கிழமை நடந்தது. இதில் கட்சியின் மாநிலத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் பேசியதாக, காங்கிரஸ் வட்டாரங்களில் கிடைத்த தகவல்கள்:

தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் மட்டும் தோற்கவில்லை. அனைத்து மாநிலங்களிலும் தோற்று விட்டது. ஆட்சியிலிருந்த ராஜஸ் தானிலும், ஆந்திராவிலும் ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. தமிழகத்தில் கூட்டணி உண்டா, இல்லையா என்பதே கடைசி ஒரு மாதத்தில்தான் தெரிந்தது. அதனால் கட்சியினரே சுதாரித்துக்கொள்ள முடியவில்லை.

நான் பண ஆசை பிடித்தவன் இல்லை. காங்கிரஸின் சொத்துக் களை எடுத்துச் சென்றுவிட மாட்டேன். என் குடும்ப பாரம்பரியம் பற்றி அனைவருக்கும் தெரியும். நேர்மையாக கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறேன். கட்சித் தலைமை மீது கோபமென்றால், அதை சிதம்பரம் ஆட்கள் டெல்லியில் சோனியா மற்றும் ராகுல் காந்தியிடம் சொல்லியிருக்கலாம். மாறாக அறிக்கைகள் விடுவதால் கட்சிக்குதான் கெட்ட பெயர்.

கட்சியின் தேசியத் தலைவர்கள், சென்னைக்கு வருவது மாநிலத் தலைமைக்கே தெரிவதில்லை. அவர்களாக வருகிறார்கள், தனியாக கூட்டணி குறித்து வேறு கட்சி தலைவர்களுடன் பேசுகிறார்கள். எந்த விவகாரமாக இருந்தாலும் மாநிலத் தலைமையில் யார் இருந்தாலும், அவர்கள் மூலம் நடப்பதுதான் நல்லது.

2ஜி வழக்கில் அலைக்கற்றை ஏலம் விட்டது பிரதமருக்கும் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் தெரியும் என்று திமுகவின் ஆ.ராசா வாக்குமூலம் கொடுத்தார். இதனால், காங்கிரஸுக்கும் இதில் தொடர்பு உள்ளது போன்ற தவறான எண்ணம் மக்களிடம் ஏற்பட்டுவிட்டது. காங்கிரஸுக்கு இதில் தொடர்பில்லை என்பதை மத்திய அரசு நிரூபிக்கவில்லை. இதுகுறித்து ராசாவுக்கு பிரதமர் கடிதம் எழுதியதாக கூறப்பட்டது. அந்தக் கடிதம் என்ன? அதில் இருந்த விவரங்கள் என்ன என்பதை வெளியிட்டிருந்தால் தமிழகத்தில் காங்கிரஸுக்கு இந்த நிலை வந்திருக்காது.

இவ்வாறு ஞானதேசிகன் பேசியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x