Published : 01 Nov 2021 01:33 PM
Last Updated : 01 Nov 2021 01:33 PM
கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிக, மிகப் பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர்களின் சமூக, கல்வி மேம்பாட்டிற்காக போராடிப் பெறப்பட்ட இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பது பேரதிர்ச்சி அளிப்பதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
’’தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 % உள் இட ஒதுக்கீடு வழங்கி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிக, மிகப் பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர்களின் சமூக, கல்வி மேம்பாட்டிற்காகப் போராடிப் பெறப்பட்ட இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது.
வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் இன்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே. முரளி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான 7 வினாக்களுக்கு அரசுத் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம் போதுமானதாக இல்லை என்று கூறி, வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் செல்லாது என்று தீர்ப்பளித்திருக்கிறது. தமிழ்நாட்டில் இதுவரை வழங்கப்பட்ட இஸ்லாமியர்கள் உள் இட ஒதுக்கீடு, அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு ஆகியவற்றுக்குச் சென்னை உயர் நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ தடை விதிக்காத நிலையில், வன்னியர்கள் உள் இட ஒதுக்கீட்டுக்கு மட்டும் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப் பட்ட வழக்கிலும் இதே வாதங்களைத்தான் சமூக நீதிக்கு எதிரான சக்திகள் முன்வைத்தன. ஆனால், அந்த வழக்கில் 2010ஆம் ஆண்டு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் அந்த வாதங்களை ஏற்றுக்கொள்ளவில்லை; 69% இட ஒதுக்கீட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்து விட்டது. ஆனால், இப்போது உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருப்பது சமூகநீதிக்கு இழைக்கப்படும் பெரும் தீங்கு.
வன்னியர்கள் உள் இட ஒதுக்கீட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட்டபிறகு, அதன் அடிப்படையில் பல லட்சக்கணக்கான மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பில் சேர்ந்துள்ளனர். அவர்களின் நலனையும், எதிர்காலத்தையும் கருத்தில்கொள்ளாமல் உயர்நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. இது அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். இதனால் அவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கும், பிற பாதிப்புகளுக்கும் ஆளாகியுள்ளனர். இத்தீர்ப்புக்கு எதிராக உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அவர்களின் நலன்களையும் சமூகநீதியையும் பாதுகாக்க தமிழக அரசு போர்க்கால வேகத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு எளிதாக சாத்தியமாகிவிடவில்லை. பல்வேறு நிலைகளில் 40 ஆண்டுகளாக நடத்தப்பட்ட சமூகநீதிப் போராட்டங்களின் பயனாகவே இந்த உள் இட ஒதுக்கீடு சாத்தியமானது. இதற்காக என்னால் நிறுவப்பட்ட வன்னியர் சங்கமும், அதன் வழிகாட்டுதலில் வன்னியர் சமுதாய மக்களும் நடத்திய போராட்டங்களும், உயிரிழப்பு உள்ளிட்ட இழப்புகளும் ஏராளம். இதுதான் வன்னிய மக்களின் முன்னேற்றத்திற்குக் கருவியாக இருக்கும் என்று நம்பிக் கொண்டிருந்த வேளையில், அது ரத்து செய்யப்பட்டிருப்பதை ஏற்க முடியவில்லை; இது சமூக நீதிக்கு ஏற்பட்ட மிகப் பெரிய பின்னடைவு. இது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி விடும்.
சுதந்திர இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில், இதுவரை வழங்கப்பட்ட அனைத்து இட ஒதுக்கீடுகளும் 1931ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் அவற்றின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்கள் தயாரித்த புள்ளி விவரங்களின் அடிப்படையில்தான் வழங்கப்பட்டுள்ளன. அதே முறையில்தான் வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டது. இத்தகைய சூழலில் சென்னை உயர் நீதிமன்றம் எழுப்பியுள்ள வினாக்கள் சமூகநீதிக்கு பாதகமானவை. அவற்றின் அடிப்படையில் தமிழ்நாட்டில் இப்போது நடைமுறையில் உள்ள அனைத்துப் பிரிவு இட ஒதுக்கீடுகளுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அந்த வினாக்களுக்கான விடைகளை வலிமையாகத் தயாரிக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உண்டு.
தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் கடந்த ஆட்சியில் இயற்றப்பட்டது என்றாலும், அதிலுள்ள நியாயத்தை தமிழகத்தின் இன்றைய ஆட்சியும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை மீட்டெடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. அதை அவர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்.
அதன்படி, தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த 10.50% உள் இட ஒதுக்கீட்டை மீட்டெடுப்பதற்காக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது உள்ளிட்ட அனைத்து சட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகளையும் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்’’.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT