Published : 01 Nov 2021 12:16 PM
Last Updated : 01 Nov 2021 12:16 PM
பெருநகர சென்னை மாநகராட்சியின் 16 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை ஆணையர் ககன்தீப் சிங் பேடி இன்று வெளியிட்டார்.
தமிழகத்தில் விடுபட்டுப்போன காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக். 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. அத்துடன் இதர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளில் மாநிலத் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
''சென்னை, ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் இன்று (1.11.2021) நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சியின் ஆணையாளரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான ககன்தீப் சிங் பேடி இதனை வெளியிட்டார்.
சென்னை மாவட்டத்தில் உள்ள16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் 01.01.2022ஆம் தேதியினைத் தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு 2022ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சுருக்க முறை திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் இன்று 01.11.2021 வெளியிடப்படுகிறது.
மேற்படி வரைவு வாக்காளர் பட்டியல் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும் வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் குறித்த விவரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா அல்லது இல்லையா என்பது குறித்து சரிபார்த்துக் கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் மற்றும் 01.01.2022 அன்று 18 வயது நிறைவு அடைபவர்கள் (01.01.2004 ஆம் தேதிக்கு முன்பாக பிறந்தவர்கள்) படிவம் 6-ஐப் பூர்த்தி செய்தும், பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7-ஐப் பூர்த்தி செய்தும், பதிவுகளில் திருத்தம் தொடர்பாக படிவம் 8-ஐப் பூர்த்தி செய்தும், சட்டமன்றத் தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 8-A-ஐப் பூர்த்தி செய்தும், அதற்கான ஆவண ஆதார நகலை இணைத்தும் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் / பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் 01.11.2021 முதல் 30.11.2021 முடிய உள்ள காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் 13.11.2021, 14.11.2021, 27.11.2021 மற்றும் 28.11.2021 (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்) ஆகிய நாட்களில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. பொதுமக்கள் www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும் தங்களுடைய பெயர்கள் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.
சென்னை மாவட்டத்தில் 3,750 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு அதன் அடிப்படையில் இன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதிகபட்சமாக பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் 297 வாக்குச்சாவடிகளும், குறைந்தபட்சமாக எழும்பூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 169 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு 19.03.2021 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர்கள் பட்டியலின்படி, ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 19,94,505, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 20,61,473, மூன்றாம் பாலின வாக்காளர்களின் எண்ணிக்கை 1,083 என மொத்தம் சென்னை மாவட்டத்தின் வாக்காளர்களின் எண்ணிக்கை 40,57,061 ஆகும்.
நடைபெற்று முடிந்த தொடர் திருத்தத்தில் சென்னை மாவட்டத்தில் 19,92,198 ஆண் வாக்காளர்கள், 20,60,767 பெண் வாக்காளர்கள் மற்றும் 1,073 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 40,54,038 வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதில் 10,621 ஆண் வாக்காளர்கள்,11,862 பெண் வாக்காளர்கள் மற்றும் 9 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 22,492 வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் 12,928 ஆண் வாக்காளர்கள்,12,568 பெண் வாக்காளர்கள் மற்றும் 19 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 25,515 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
தற்போது வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலின்படி சென்னை மாவட்டத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை சட்டமன்றத் தொகுதி வாரியாக கீழ்க்கண்டவாறு உள்ளது.
வாக்காளர் எண்ணிக்கை குறைந்தபட்சமாக எண் 18 துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் 1,76,679 வாக்காளர்களும், அதிகபட்சமாக எண் 26 வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் 3,15,502 வாக்காளர்களும் உள்ளனர்.
ஜனநாயகத்தினை வலுப்படுத்த, தகுதியுள்ள அனைத்துப் பொதுமக்களும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற ஏதுவாக வரைவு வாக்காளர் பட்டியலினைப் பார்வையிட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் / அரசு முதன்மை செயலாளர் / பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி கேட்டுக்கொண்டுள்ளார்''.
இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT