Published : 31 Oct 2021 11:37 AM
Last Updated : 31 Oct 2021 11:37 AM
எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயத்திற்கு ஆதரவானவர்கள் போலக் காட்டிக்கொண்டு வசனம் பேசுவதையும் , ஆட்சிக்கு வந்ததும் விவசாயத்திற்கு எதிரான திட்டத்திற்குக் கையெழுத்து போடுவதையும் திமுக வாடிக்கையாக வைத்திருக்கிறது என்று டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகள்:
’’காவிரி டெல்டாவில் புதிய பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களை உருவாக்குவதற்கான ஏல அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
எதிர்க் கட்சியாக இருக்கும்போது விவசாயத்திற்கு ஆதரவானவர்கள் போலக் காட்டிக்கொண்டு வசனம் பேசுவதையும் , ஆட்சிக்கு வந்ததும் விவசாயத்திற்கு எதிரான (ஹைட்ரோ கார்பன் போன்ற) திட்டத்திற்குக் கையெழுத்து போடுவதையும் திமுக வாடிக்கையாக வைத்திருக்கிறது.
அந்த வரிசையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களை உருவாக்குவதற்கான அறிவிப்பைத் திமுக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோது இப்பிரச்னையில் கொண்டிருந்த நிலைப்பாட்டையே, முதல்வராக இருக்கும் ஸ்டாலின் செயல்படுத்த வேண்டும்.
மேலும் இதுபோன்ற சிக்கல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்தில் உள்ள குறைகளைச் சரி செய்து சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்’’.
இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT