Published : 31 Oct 2021 03:09 AM
Last Updated : 31 Oct 2021 03:09 AM

சென்னையில் வானிலை ஆய்வு மையத்தின் புதிய ரேடார் செயல்படத் தொடங்கியது

சென்னை

சென்னையில் வானிலை ஆய்வு மையத்தின் புதிய ரேடார் பள்ளிக்கரணையில் நேற்று செயல்படத் தொடங்கியது.

மழை மேகங்களின் தன்மை,நகர்வு, மழை அளவு போன்றவற்றை ரேடார் மூலம் கிடைக்கும் தரவுகள் மூலம் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து வருகிறது. ரேடார்களில் இருந்து செலுத்தப்படும் மின் காந்த அலைகள் மூலமாகக் கிடைக்கும் தரவுகளைக் கொண்டு, குறுகியகால வானிலை முன்னறிவிப்பு, நிகழ்நேர மழை நிலவரம் போன்றவற்றை ஆய்வு மையத்தால் வழங்க முடியும்.

இது தொடர்பான ரேடார் படங்கள் http://www.imdchennai.gov.in/ என்ற இணையதளம் மூலம் வழங்கப்படுகின்றன. இணையதள சேவை மற்றும் சமூக ஊடங்கள் வருகையால், வானிலை ஆய்வு மையம் வெளியிடும் ரேடார் படங்களை, தன்னார்வ அடிப்படையில் வானிலையைக் கணிக்கும் ஆர்வலர்கள் பயன்படுத்தி, வானிலை நிலவரங்களை முகநூல், ட்விட்டர், யூடியூப் போன்றவற்றில் வெளியிடத் தொடங்கினர். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், இணையதளத்தில் ரேடார் படங்களை மக்களே நேரடியாகப் பார்வையிட்டு, நிகழ்நேரவானிலையை தெரிந்துகொள் வதில் ஆர்வம் காட்டினர்.

பழுதடைந்த ரேடார்

சென்னை துறைமுகக் கட்டிடத்தில் செயல்பட்டு வந்த ரேடார் 2018-ல் பழுதடைந்தது. அதற்கான உதிரி பாகங்கள் கிடைக்காததால், பழுது நீக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் மக்கள் நேரடியாக நிகழ்நேர மழை நிலவரத்தை அறியமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரனிடம் கூறியதாவது: பழுதாகியுள்ள ரேடார் விரைவில் சீரமைக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வரும். இதற்கிடையில், பள்ளிக்கரணையில் உள்ள இந்திய பெருங்கடல் சார் தொழில்நுட்ப நிறுவன (NIOT) வளாகத்தில் புதிய ரேடார் நிறுவப்பட்டுள்ளது. இது நேற்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. அதன் படங்கள் தற்போது வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன. அவற்றைப் பொதுமக்கள் பார்வையிடலாம்.

பழைய ரேடார் பழுதால் வானிலை கணிப்பில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. ஹரிகோட்டா, திருவனந்தபுரத்தில் இயங்கும் இஸ்ரோ ரேடார்கள், காரைக்காலில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மைய ரேடார் ஆகியவற்றின் தரவுகளைப் பயன்படுத்தி வருகிறோம்.

நிகழ்நேர மழை நிலவரக் கணிப்பு ரேடார் தரவுகள் அடிப்படையில் மட்டுமின்றி, செயற்கைக்கோள் புகைப்படம், பலூன் மூலம் பறக்க விடப்படும் கருவி உள்ளிட்ட பல்வேறு வழிகளில் கிடைக்கும் தரவுகள் அடிப்படையில்தான் கணிக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x