Last Updated : 07 Mar, 2016 03:17 PM

 

Published : 07 Mar 2016 03:17 PM
Last Updated : 07 Mar 2016 03:17 PM

மீனவப் பிரதிநிதியை தேர்ந்தெடுக்க விரும்பும் குளச்சல் தொகுதி மக்கள்

குளச்சல் சட்டப்பேரவைத் தொகுதியை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் காங்கிரஸ் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அதே சமயம், மீனவ பிரதிநிதியை எம்.எல்.ஏ.வாக்க வேண்டும் என்ற கோரிக்கை மீனவ கிராம மக்களிடையே எழுந்துள்ளது.

குளச்சலில் 2 லட்சத்து 60 ஆயிரத்து 607 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 32 ஆயிரத்து 311 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 28 ஆயிரத்து 281 பேரும் உள்ளனர். இவர்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீனவ மக்கள். இவர்களில் 80 சதவீதம் பேர் வாக்களிக்கும் வேட்பாளரே கடந்த தேர்தல்களில் வெற்றிபெற்று வந்துள்ளனர்.

இத்தொகுதியில் நாடார் சமுதாயத்தினர் அதிக அளவில் வசிக்கின்றனர். அதேபோன்று இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள தொகுதியில் இதுவும் ஒன்று. மேலும் கிருஷ்ணவகை, நாயர், ஆசாரி, தலித் என பல்வேறு சமூகத்தினரும் வசிக்கின்றனர்.

வாக்குச் சேகரிப்பு

இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமிய வாக்குகளைப் பெற ஒவ்வொரு கட்சியினரும் செல்வாக்கு மிக்க வேட்பாளர்களை நிறுத்த ஆயத்தமாகி வருகின்றனர். கூட்டணி முடிவு இன்னும் இறுதியாகாத நிலையில் கட்சியினர் குழப்பத்தில் இருந்து வந்தாலும் தொகுதியை கைப்பற்றுவதற்கு தற்போதே வீடுவீடாகச் சென்று வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

8 முறை காங்கிரஸ் வெற்றி

கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் சட்டபேரவைத் தொகு தியை 8 முறை கைப்பற்றிய பெருமையை காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது.

இங்கு 1954-ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட டி.டி.டேனியல் வெற்றிபெற்றார். 1957-ல் காங்கிரஸின் மீனவப் பெண் வேட்பாளரான லூர்தம்மாள் சைமன் வெற்றிபெற்றார். 1962-ல் சுயேச்சை வேட்பாளர் ஏ.சுவாமி தாஸ், 1967-ல் காங்கிரஸ் வேட்பாளர் ஏ.சிதம்பரநாதன் நாடார் ஆகியோர் குளச்சல் தொகுதியில் வெற்றிபெற்றனர். 1971-க்குப் பின் நடைபெற்ற தேர்தல்களில் 3 முறை (1971, 1989, 1991) காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ.வான பெருமையை ஏ.பாலையா பெற்றுள்ளார்.

1977-ல் ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட ஆர்.ஆதிசாமி வெற்றிபெற்றார். திமுக சார்பில் போட்டியிட்டு எஸ்.ரெத்தினராஜ் (1980), இரா.பெர்னார்டு (1996) ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர். இதேபோல் அதிமுக சார்பில் போட்டியிட்டு எப்.எம்.ராஜரெத்தினம் (1984), கே.டி.பச்சைமால் (2001) ஆகியோர் எம்.எல்.ஏ. ஆனார்கள்.

பின்னர் 2006, 2011 சட்டப்பேரவைத் தேர்தல்களில் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியே வெற்றிபெற்றுள்ளது. 2006 தேர்தலில் எஸ்.ஜெயபாலும், 2011-ல் ஜே.கே.பிரின்சும் குளச்சல் தொகுதியை கைப்பற்றினர்.

வர்த்தக துறைமுகம்

இத்தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய இடம் வகிக்கப்போவது வர்த்தக துறைமுகப் பிரச்சினைதான். இதையே தங்களின் பிரதான பிரச்சார உத்தியாக மேற்கொள்ள பல்வேறு கட்சிகளும் முடிவு செய்துள்ளன. நாட்டின் வளர்ச்சிக்கு முன்னோடியான திட்டம் என்ற பிரச்சாரத்தை முன்வைத்து பாஜக தேர்தலை சந்திக்கிறது. ஆனால், அதற்கு எதிரான நிலைப்பாடுடைய கட்சிகளும், இதே பிரச்சினையை கையில் எடுத்து மக்களை சந்திக்க தயாராகி வருகின்றன.

மீனவப் பிரதிநிதிகள்

குளச்சல் தொகுதியில் லூர்தம்மாள் சைமன், இரா. பெர்னார் டுக்கு பின்பு மீனவப் பிரதிநிதிகள் யாரும் சட்டப்பேரவைக்கு தேர்வுபெறவில்லையே என்ற ஆதங்கம் மீனவ கிராம மக்களிடையே உள்ளது.

எனவே, இம்முறை தங்கள் பிரச்சினைகளுக்காக சட்டப் பேரவையில் குரல்கொடுக்கக் கூடிய மீனவப் பிரதிநிதி ஒருவரை யே வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பதில் மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் உறுதியாக உள்ளனர். அவர்கள் கனவு நிறைவேறுமா? தேர்தல் முடிவுகள்தான் பதில் சொல்லும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x