Published : 30 Oct 2021 06:47 PM
Last Updated : 30 Oct 2021 06:47 PM
அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் ஜிஎஸ்டி கவுன்சிலில் உறுப்பினராக உள்ளனர். அவர்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர முடியும் என புதுவை பாஜக தேசிய பொதுச் செயலாளர் புரந்தேஸ்வரி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மரப்பாலம் பகுதியில் உள்ள தனியார் கன்வென்ஷன் சென்டரில் பாஜக கேந்திர நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (அக். 30) நடைபெற்றது. தேசிய பொதுச் செயலாளர் புரந்தேஸ்வரி தலைமை தாங்கினார்.
மாநிலத் தலைவர் சாமிநாதன், தேசிய செயற்குழு உறுப்பினரும், மாநில உள்துறை அமைச்சருமான நமச்சிவாயம், அமைச்சர் சாய் ஜெ.சரவணன்குமார், செல்வகணபதி எம்.பி. மற்றும் பாஜக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொகுதி வாரியாக நிர்வாகிகளிடம் புரந்தேஸ்வரி ஆலோசனை நடத்தி, கருத்துகளைக் கேட்டறிந்தார். கூட்டத்துக்குப் பின் புரந்தேஸ்வரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘‘புதுச்சேரியில் பாஜக கட்டமைப்பு எப்படி உள்ளது? என்பதை ஆய்வு செய்வதற்கு வந்தேன். இங்கு வந்து நிர்வாகிகளுடன் பேசும்போது, ஒரு உத்வேகம் ஏற்பட்டுள்ளதோடு, வரும் காலங்களில் கட்சி பலம்பெறும் என்ற நம்பிக்கையும் உள்ளது. பாஜக அதிகாரத்துக்கு வந்தால் மக்களுக்காக சேவை செய்யவே நினைக்கும். அதைத்தான் தற்போது செய்து கொண்டிருக்கிறோம்.
கரோனா காலகட்டத்தில் முழு நேரமும் மக்களுக்கு சேவை செய்தது பாஜகதான். மேலும், இந்தியாவில் 100 கோடிக்கும் மேலாக கரோனா தடுப்பூசி மக்களுக்குச் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசின் சிறப்பான செயல்பாடுகள்தான் காரணம். பாஜகவினர் ஒவ்வொருவருக்கும் இதனால் பெருமை ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியுடன் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தபின், ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. குப்பை, தண்ணீர் வரி நீக்கப்பட்டுள்ளது. நாங்கள், மூத்த தலைவர்களைப் புறக்கணிக்க மாட்டோம். அவர்களுக்கு உரிய மரியாதை கொடுப்போம்’’.
இவ்வாறு புரந்தேஸ்வரி தெரிவித்தார்.
அப்போது அவரிடம் பெட்ரோல், டீசல், கேஸ் விலை தொடர்ந்து அதிகரிக்கிறதே? அவற்றின் விலையைக் குறைக்க, ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரப்படுமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசலைக் கொண்டுவந்தால் அதன் விலை கட்டுப்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் ஜிஎஸ்டி கவுன்சிலில் உறுப்பினராக உள்ளனர். அவர்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரமுடியும். பாஜக அல்லாத மற்ற மாநிலங்களும் பெட்ரோலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்று புரந்தேஸ்வரி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT