Published : 30 Oct 2021 11:45 AM
Last Updated : 30 Oct 2021 11:45 AM
முல்லைப் பெரியாறு நதிநீர் பிரச்சினையில் உண்மை நிலையை வெளிப்படையாக தமிழக மக்களுக்கு, விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ஓபிஎஸ் இன்று (அக். 30) வெளியிட்ட அறிக்கை:
"முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டுவதற்கு முன்பே, கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரளாவுக்கு தண்ணீரை திறந்து விட்டிருப்பதையும், அப்போது தமிழக அரசின் அதிகாரிகள் உடன் இருந்ததாகவும் பத்திரிகையில் செய்தி வந்திருப்பதைப் பார்க்கும்போது சொல்லாததையும் திமுக அரசு செய்து வருகிறது என்பது தெளிவாகிறது.
அதாவது, ஆட்சிக் கட்டிலுக்கு வருவதற்கு முன்பு 'உரிமைக்கு குரல் கொடுப்போம்' என்று சொன்ன திமுக, இப்போது 'உரிமைக்கு கை கொடுப்போம்' என்ற நிலைக்கு வந்துவிட்டது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீரினைத் தேக்கிக் கொள்வதை தடுக்கும் நோக்கில், கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையினை சுட்டிக்காட்டி, முல்லைப் பெரியாறு பாசன விவசாயப் பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்து தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென்று தமிழக முதல்வரை 29-10-2021 நாளிட்ட எனது அறிக்கை வாயிலாக கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால், அதற்கு முற்றிலும் மாறான நடவடிக்கையே கேரள அரசு எடுத்திருப்பது வேதனை அளிக்கிறது.
கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர், கேரள வருவாய்த்துறை அமைச்சர் மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அணை அருகே உள்ள மூன்றாவது மற்றும் நான்காவது மதகுகளிலிருந்து 514 கன அடி தண்ணீர் கேரளாவுக்கு திறந்து விடப்பட்டிருப்பதாகவும், அப்போது தமிழக அரசு சார்பில் அதிகாரிகள் உடனிருந்ததாகவும், அணை நிலவரம் குறித்து அடிக்கடி தெரிவிக்கும் வகையில் இரு மாநில அதிகாரிகளுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் பத்திரிகையில் செய்திகள் வந்துள்ளன.
இதற்கு தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் சங்கம் தேனி மாவட்டம் ஆட்சியரிடம் தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளது. ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் பேசுகையில், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு இன்னும் அணை நீர் கிடைக்காத நிலையில், கேரளாவுக்கு தண்ணீர் திறக்கபட்டதை ஏற்க முடியாது என்றும், இதன் காரணமாக தமிழகத்தின் உரிமை பறிபோய் உள்ளதாகவும், கேரள அரசின் விதிமீறலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், கேரள அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார். கேரள அரசின் இந்தச் செயலுக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெரியாறு அணையில் கேரள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில், தண்ணீர் திறப்பது இதுவே முதல்முறை என்றும், இது தமிழக விவசாயிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. மொத்தத்தில், தமிழகத்தினுடைய உரிமை கேரளாவிடம் அடகு வைக்கப்பட்டுவிட்டது என்றே விவசாயிகள் கருதுகிறார்கள்.
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என்று நிபுணர்களும் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரும் தெரிவித்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டாத சூழ்நிலையில், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை தண்ணீர் சென்றடையாத நிலையில், கேரளாவுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டியதன் அவசியம் என்ன என்பதுதான் விவசாயிகளின் வினாவாக இருக்கிறது.
தமிழக அரசினுடைய இசைவுடன் தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரள அமைச்சர்கள் முன்னிலையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதா அல்லது கேரள அரசு தன்னிச்சையாகவோ திறந்துவிட்டதா; அப்படியென்றால் தமிழக அரசு அதிகாரிகள் ஏன் கலந்து கொண்டார்கள்; தண்ணீர் திறந்துவிடுவதற்கு முன்பு ஐந்து மாவட்ட விவசாயிகளிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டதா என்ற கேள்விகளும் எழுகின்றன. இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழக அரசுக்கு இருக்கிறது.
தமிழகத்தின் உயிர்நாடிப் பிரச்சினையான முல்லைப் பெரியாறு நதிநீர் பிரச்சினையில், தமிழக முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு, உண்மை நிலையை வெளிப்படையாக தமிழக மக்களுக்கு, விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT