Published : 30 Oct 2021 11:15 AM
Last Updated : 30 Oct 2021 11:15 AM
ஒழுக்கத்தின் பெயரால் மனிதனுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்; சாதியால் அல்ல என வாழ்ந்தவர் பசும்பொன் தேவர் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை விழா அக்.28 -ல் தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனையொட்டி, பசும்பொன்னில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், தமிழக அரசின் சார்பில் முதல்வர் ஸ்டாலின் தேவர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
''நான் பேசுவது, எழுதுவது, சிந்திப்பது, சேவை செய்வது எல்லாமே என் தேசத்துக்காகவே தவிர எனக்காக அல்ல" என்று வாழ்ந்தவர் பசும்பொன் தேவர் திருமகனார். தனது தேகத்தையே தேசத்துக்காக ஒப்படைத்தவர் அவர்!
''மனிதனை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என ஒழுக்கத்தின் பெயரால் மட்டுமே மரியாதை கொடுக்க வேண்டுமே தவிர சாதியால் அல்ல" என்று சாதி ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிராக முழங்கியவர் பசும்பொன் தேவர் திருமகனார். அனைவருக்குமான தலைவர் அவர்!
''பக்குவப்பட்ட ஒருவன், இந்து கோவிலில் காட்டுகின்ற தீப வெளிச்சத்தையும் – கிறித்துவ வளாகத்தில் வைக்கிற மெழுகுவத்தி ஒளியையும் - முகமதியர் ஊதுபத்தியில் காணுகின்ற சுடரையும் தன் உடலின் இருட்டைப் போக்க எழுப்ப வேண்டிய ஞான விளக்கின் வடிவமாகக் காண்பான்" என்று சொன்ன மதநல்லிணக்க மாமனிதர்!
''தனியாக இருக்கும்போது சிந்தனை செய்வதில் கவனம் செலுத்துங்கள். கூட்டத்தோடு இருக்கும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள்" என்று சொன்ன தத்துவஞானி!
''நேரம் வரும்போது யானையை எதிர்க்கும் வீரமும் தீரமும் - அதேநேரத்தில் எறும்பு கடிக்கும் போது கோபம் வராமல் வருடிக் கொடுக்கும் பொறுமைக் குணமும் அரசுக்கு அமைந்திருக்க வேண்டும்" என்று ஆட்சியாளர்களுக்கு இலக்கணம் வகுத்த அரசியல் மேதை!
''முழு இந்தியாவிலும் வாழ்க தமிழ்" என்று முழங்கிய தமிழ் ஆளுமை!
பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் முன்மொழிந்த இந்த முத்துமொழிகளைப் பின்பற்றி நடப்பதுதான் அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி!
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT