Published : 30 Oct 2021 03:12 AM
Last Updated : 30 Oct 2021 03:12 AM
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 114-வது ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை விழா அக்.28 -ல் தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று முன்தினம் யாகசாலை பூஜை மற்றும் லட்சார்ச்சனையுடன் ஆன்மிக விழா தொடங்கியது. இரண்டாவது நாளான நேற்று அரசியல் விழா நடைபெற்றது.
இதையொட்டி சசிகலா மதுரையிலிருந்து வேனில் புறப்பட்டு பசும்பொன் வந்தார். பகல் 1.27 மணிக்குதேவர் நினைவிடம் வந்த அவரைபோலீஸார் மற்றும் தொண்டர்கள் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். அங்கு அவர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் தேவர் நினைவிடம் முன்அமர்ந்து தியானம் செய்தார்.தொடர்ந்து தேவர் வாழ்ந்த இல்லம், தேவரின் வாழ்க்கை வரலாறுஅடங்கிய புகைப்பட கண்காட்சியை சசிகலா பார்வையிட்டார்.
முன்னதாக நினைவிடம் வந்த சசிகலாவை தேவர் நினைவிடப் பொறுப்பாளர்கள் காந்திமீனாள் நடராஜன், தங்கவேலு, பழனி ஆகியோர் வரவேற்றனர்.
பசும்பொன்னில் இன்று நடைபெறும் அரசு விழாவில், தமிழகஅரசின் சார்பில் முதல்வர்ஸ்டாலின் காலை 9 மணிக்கு தேவர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.
முதல்வருடன் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆர். பெரியகருப்பன், பெ.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், அர.சக்கரபாணி, பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகிய 10 அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
முன்னதாக முதல்வர், மதுரைகோரிப்பாளையத்தில் உள்ள தேவரின் உருவச்சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்திவிட்டு பசும்பொன் புறப்படுகிறார்.
அதிமுக சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமி ஆகியோர் இன்று பசும்பொன் செல்லவில்லை. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உட்பட இரண்டாம் கட்டத் தலைவர்கள் மரியாதை செலுத்துகின்றனர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சட்டப்பேரவை காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.ஆர். ராமசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் ஹெச்.ராஜா, நயினார் நாகேந்திரன் மற்றும் பிற அரசியல் கட்சித் தலைவர்கள் இன்று மரியாதை செலுத்துகின்றனர்.
குருபூஜையை முன்னிட்டு 15ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT