Published : 30 Oct 2021 03:13 AM
Last Updated : 30 Oct 2021 03:13 AM
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 18 ஆயிரம் போலீஸார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தியாகராயநகரில் நகை பறிப்பைத் தடுக்க, பெண்களுக்கு கழுத்தில் அணியும் பிரத்யேக வடிவமைப்புடன் கூடிய துணிக் கவசங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
தீபாவளி பண்டிகை வரும் 4-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சென்னையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக சென்னையில் அதிகளவு கூடும் இடங்களான தியாகராயநகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 29-ம் தேதி (நேற்று) முதல் அக்.4-ம் தேதி இரவு வரை சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளோம். அதன்படி, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல், குற்ற தடுப்பு முறைகள், கரோனா தொற்று பரவாமல் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய 3 முக்கிய நடைமுறைகளை கடைப்பிடித்து பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் சுமார் 18 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, போலீஸார் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு, நேரடியாகவும், பைனாகுலர் மூலமும் கண்காணித்து, குற்றச் செயல்கள் நடக்காமல் தடுத்து வருகின்றனர்.
தியாகராயநகர், பாண்டி பஜார் பகுதிகளில் பெண்களின் கழுத்திலுள்ள தங்க நகைகள் திருடப்படாமல் தடுக்க கழுத்தில் துணிகளை சுற்றி கவசமாக (Scarf) கட்டிக்கொள்ள 10 ஆயிரம் துணிக் கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
கண்காணிப்பு கேமராக்கள்
முக்கிய சந்திப்புகளில் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் அமைத்தும், கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் பொதுமக்கள் கூடும் இடங்களிலும், வணிக வளாகங்களிலும், நடமாடும் உடைமைகள் சோதனை கருவி வாகனத்தின் மூலம் சுழற்சி முறையில் சென்று பொதுமக்களின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. பட்டாசு கடைகளின் அருகில் காவல்துறை சார்பில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அசம்பாவிதங்கள் நிகழாமல் கண்காணித்து வருகின்றனர். பட்டாசு கடை வைக்க இதுவரை 683 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
1,200 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பழைய குற்றவாளிகளின் முகத்தை அடையாளம் காணும் வகையில் உள்ள நவீன கேமராக்கள் (Face Recognition Camera) செல்போனில் பொருத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
பழைய குற்றவாளிகள் கூட்டத்துக்குள் புகுந்தால் போலீஸார் அவரை எளிதில் அடையாளம் காண இந்த கேமராக்கள் உதவும். தீபாவளியன்று காலை 6 முதல் 7 மணிவரையும், இரவு 7 முதல் 8 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசின் தடையை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது கூடுதல் காவல் ஆணையர்கள் செந்தில் குமார், கண்ணன், பிரதீப் குமார், பி.சி.தேன்மொழி, துணை ஆணையர்கள் மீனா, விமலா, ஸ்ரீதர்பாபு, கூடுதல் துணை ஆணையர் ஷாஜிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT