Published : 29 Oct 2021 08:08 PM
Last Updated : 29 Oct 2021 08:08 PM
கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். 'பவர் ஸ்டார்' என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இன்று (அக்டோபர் 29) காலை புனித் ராஜ்குமார் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 46.
புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு கன்னடத் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகினரும் தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவரின் மறைவுக்கு தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார், திடீர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளது என்னை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மறைந்த கன்னட சினிமா சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் என் மீது மிகுந்த அன்பும் பாசமும் காட்டியவர். அந்த வகையில் அவர்களின் குடும்பத்தினர் அனைவருடன் எனது நட்பு தற்போதும் தொடர்ந்து வருகிறது. கன்னட நடிகர் ராஜ்குமாரின் இளைய மகன் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் மரணம் அடைந்த செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு, உற்றார் உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு, கன்னடத் திரையுலகினருக்கு, ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கன்னடத் திரையுலகில் மூத்த நடிகரான மறைந்த ராஜ்குமாரின் ஐந்தாவது மகன் புனித் ராஜ்குமார். இவருடைய மனைவியின் பெயர் அஸ்வினி. த்ரிதி மற்றும் வந்திதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவருடைய அண்ணன் சிவராஜ்குமாரும் கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.
புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு கன்னடத் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவைத் தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சில பகுதிகளில் 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT