Published : 29 Oct 2021 06:24 PM
Last Updated : 29 Oct 2021 06:24 PM
புதுச்சேரியில் தொடர் கனமழையால் பல முக்கியச் சாலைகள் மூழ்கியதால் மக்கள் தவித்தனர். அதிலும் பள்ளமாகியுள்ள சாலைகளில் வாகனங்கள் ஓட்டவே பலரும் திண்டாடினர். காலை முதல் மாலை வரை 110 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. புதுவையிலும் கடந்த இரு தினங்களாகப் பரவலாக லேசாக மழை பெய்து வரும் நிலையில், இன்று காலை புதுச்சேரி நகரில் மழை பெய்யத் தொடங்கி, தொடர்ந்து ஒரு மணி நேரம் மழை கொட்டித் தீர்த்தது.
இதனையடுத்து சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கிய மழை, தொடர்ந்து பெய்தது. இதனால் புதுச்சேரி நகரம் முழுவதும் சாலைகளில் மழைநீர் வழிந்தோடுகிறது. அதிலும் புதுச்சேரியில் பல சாலைகள் தற்போது பள்ளமாகியுள்ளன. அதில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகனங்களில் மக்கள் செல்லவே தவித்தனர். குறிப்பாகப் புதுச்சேரி புஸ்ஸி வீதி, இந்திரா காந்தி சிலை, ராஜீவ் காந்தி சிலை, பாவன நகர், லாஸ்பேட்டை கிழக்குக் கடற்கரைச் சாலை ஆகிய தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
புதுச்சேரி பெரிய வாய்க்கால், உப்பனார் வாய்க்கால்களில் நீண்ட நாள்களுக்குப் பிறகு மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதேபோல் திருக்கனூர், பாகூர், மடுகரை, மதகடிப்பட்டு, அரியாங்குப்பம், காலாபட்டு, சேதராபட்டு உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழைப் பொழிவு நீடித்தது. காலை 8.30 மணிக்குத் தொடங்கி மாலை 5.30 வரை 110 மிமீ மழை பதிவாகியுள்ளது.
தீபாவளி வர்த்தகம் நெருங்கியுள்ள சூழலில் பொருட்கள் வாங்க வந்தவர்கள் தொடங்கி, வர்த்தகர்களும், சிறுகடை வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள் வரை பலரும் தொடர் மழையால் பாதிக்கப்பட்டனர். மழை பொழியும்போதெல்லாம் புதுச்சேரியின் முக்கியப் பகுதியான இந்திரா காந்தி சிலையருகே மழைநீர் தேங்குகிறது.
இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, "தண்ணீர் தேங்க முக்கியக் காரணம் கடந்த காலங்களில் விவசாயப் பாசனத்திற்காக ஊசுட்டேரியில் இருந்து அமைக்கப்பட்ட பள்ள வாய்க்கால், மேட்டு வாய்க்கால் ஆகியவை ஆக்கிரமிப்புகளால் அதன் அகலம் குறுகியது. இதனால் ஒவ்வொரு ஆண்டு மழையின்போதும் இந்திராகாந்தி சிலை சிக்னல், பூமியான்பேட்டை பகுதியில் மழைநீர் சூழ்ந்து கொள்கிறது.
முன்பு இருந்ததை விடத் தற்போது தண்ணீர் தேங்குவது குறைந்துள்ளது. இந்திரா காந்தி சிலை சிக்னலில் மழை நீர் தேங்கும் பிரச்சினைக்குத் தீர்வு காண ரூ. 11 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணி செய்ய திட்டம் தயாரிக்கப்பட்டது. அதைச் செயல்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT