Last Updated : 29 Oct, 2021 04:30 PM

 

Published : 29 Oct 2021 04:30 PM
Last Updated : 29 Oct 2021 04:30 PM

கீழடி அகழாய்வுப் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

திருப்புவனம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 7 கட்டங்களாக அகழாய்வுப் பணிகள் நடந்துள்ளன. அதேபோல் கொந்தகை, அகரம், மணலூர் பகுதிகளிலும் அகழாய்வுப் பணிகள் நடந்தன. இதில் முதல் 3 கட்ட அகழாய்வுப் பணிகளை மத்தியத் தொல்லியல் துறையும், 4 முதல் 7 கட்ட அகழாய்வுப் பணிகளைத் தமிழகத் தொல்லியல் துறையும் மேற்கொண்டன.

இதில் கீழடியில் செங்கல் கட்டுமானங்கள், உறை கிணறுகள், பாசி மணிகள், தங்க ஆபரணங்கள், வெள்ளிக் காசு, தாயக்கட்டை, சுடுமண் பொம்மைகள், முத்திரைகள், எடைக்கற்கள் எனப் பல ஆயிரம் தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதன் மூலம் கீழடி நகர நாகரிகம் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனத் தெரியவந்தது. 7-ம் கட்ட அகழாய்வுப் பணி செப்.30-ம் தேதியுடன் முடிவடைந்தது. மேலும் இங்கு கண்டறியப்பட்ட தொல் பொருட்களைப் பொதுமக்கள் பார்வையிடும் வகையில், கொந்தகையில் ரூ.12.21 கோடியில் கீழடி அகழ் வைப்பகம் கட்டும் பணியும் நடந்து வருகிறது.

இதுதவிர கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் என அகழாய்வு நடந்த இடங்களில் குழிகளை மூடாமல் அப்படியே பொதுமக்கள் பார்க்கும் வகையில் திறந்தவெளி அகழ் வைப்பகம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.

இந்நிலையில் கீழடியில் அகழாய்வு நடந்த குழிகள் மற்றும் காட்சிப்படுத்தப்பட்ட தொல்பொருட்கள் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். தொடர்ந்து அவருக்குச் சுற்றுலா மற்றும் தொல்லியல் துறை முதன்மைச் செயலர் சந்திரமோகன், அகழாய்வு குறித்து விளக்கினார்.

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மூர்த்தி, கீதா ஜீவன், முதல்வரின் தனிச்செயலர் செயலர் உதயச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் பி. மதுசூதன் ரெட்டி, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் ஜெயசீலன், எம்எல்ஏக்கள் தமிழரசி, மாங்குடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும், கொந்தகையில் கட்டப்பட்டு வரும் கீழடி அகழ்வைப்பக கட்டுமானப் பணிகளை முதல்வர் ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், அதை முதல்வர் ஆய்வு செய்யாமல் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x