Published : 29 Oct 2021 01:30 PM
Last Updated : 29 Oct 2021 01:30 PM
ஒவ்வொருவரும் தம்முடைய வருவாயில், ஒரு பகுதியைப் பாதுகாப்பான வழியில் சேமிப்பதுதான் சிறந்தது என்று நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
உலக சிக்கன நாளை ஒட்டி இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
''உலக சிக்கன நாள் நாள் (அக்டோபர் 30) தமிழகமெங்கும் கொண்டாடப்படுவது குறித்து பெருமகிழ்ச்சி அடைவதுடன் என் மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவில் 1985ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 30ஆம் நாள் உலக சிக்கன நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சிக்கன நடவடிக்கையைக் கடைப்பிடித்து, சிக்கனமாக வாழ்ந்து, வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்ப்பதையே இந்த உலக சிக்கன நாள் வலியுறுத்துகிறது.
“ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை”
என வரவுக்குள் செலவு செய்து, சிக்கனமாக வாழ வேண்டும் என்பதுடன் மனித வாழ்க்கையில் சேமிப்பின் முக்கியத்துவத்தையும் திருவள்ளுவர் விளக்கியுள்ளார்.
சிறுகச் சிறுகச் சேமிப்பதன் மூலம் குடும்பத்திற்குத் தேவைப்படும் அவசரத் தேவைகளை, எளிதில் எதிர்கொள்ளலாம். பிள்ளைகளின் படிப்பு, திருமணம், வீடு கட்டுதல் போன்ற செலவினங்களைக் கடன் வாங்காமல் மேற்கொள்ளலாம். ஒவ்வொருவரும் தம்முடைய வருவாயில், ஒரு பகுதியைப் பாதுகாப்பான வழியில் சேமிப்பதுதான் சிறந்தது.
மக்கள் தங்களது சேமிப்புத் தொகையைப் பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்தால்தான், அவர்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் அவ்வாறு முதலீடு செய்த பணத்தைத் தக்க தருணத்தில் திரும்பப் பெற முடியும். இந்த வகையில் அஞ்சலகங்களில் செயல்படுத்தப்படும் சிறு சேமிப்புத் திட்டங்கள் பாதுகாப்பானவை.
தமிழக மக்கள் அனைவரும் அருகிலுள்ள அஞ்சலகத்தில் பாதுகாப்பான அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து பயன் பல பெற்றிட, இந்த உலக சிக்கன நாளில் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்''.
இவ்வாறு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT